பதவி இழக்கும் அமைச்சர்கள்...! யார்? யார்?

பதவி இழக்கும் அமைச்சர்கள்...! யார்? யார்?

விரைவில் தமிழ்நாடு அமைச்சரவை மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சிலர் பதவி இழக்கக்கூடும் என்றும் சிலரது இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்று வரும் மே ஏழாம் தேதியுடன் இரண்டு ஆண்டு நிறைவு பெற்று மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்க உள்ளார்.

இந்த நிலையில் அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்ய அவர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டம் குன்னூரில் அனுமதி பெறாமல் தன்னுடைய ஹோட்டலுக்காக சாலை போடப்பட்டதாக புகாருக்குள்ளான சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்   நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்  நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு பதிலாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் எம்.எல்.ஏ ராஜாவுக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவேளை ராஜாவுக்கு வாய்ப்பில்லை என்றால், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் எம்.எல்.ஏ தமிழரசிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

அதேபோல, திருவாரூர் மாவட்டத்திற்கு அமைச்சர் இல்லாமல் இருக்கும் நிலையில் டிஆர்பி ராஜாவுக்கு அந்த பொறுப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. அத்துடன் சில அமைச்சர்களின் இலாக்காக்களும் மாற்றி அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com