ஷின்சோ அபேவிற்கு கண்ணீர் மல்க விடை கொடுத்த மக்கள்

ஷின்சோ அபேவிற்கு கண்ணீர் மல்க விடை கொடுத்த மக்கள்

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு இன்று இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மக்களால் துக்கம் அனுசரித்து வருகின்றனர்.

டோக்கியோவின் ஜோஜோஜி கோவிலில் நண்பர்கள் மற்றும் நெருங்கிய குடும்பத்தினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இறுதிச் சடங்கு நடைபெற்று வருகிறது.

இறுதிச் சடங்கைத் தொடர்ந்து, அபேயின் உடலைத் தாங்கிய வாகனம் டோக்கியோ வழியாகச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

67 வயதான அபே கடந்த வெள்ளிக்கிழமை தெற்கு ஜப்பானில் உள்ள நாராவில் பிரச்சார உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜோஜோஜி கோவிலின் உள்ளே, புத்த சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

டோக்கியோ முழுவதும், கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளதாகவும் கோவிலுக்கு வெளியே, மக்கள் அதிகம் பேர் துக்கம் அனுசரிக்க கூடியுள்ளதாகவும் தெரிகிறது.

அபே தங்களுக்கு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உணர்வைக் கொடுத்ததாகவும் கோவிட் நோயின் ஆரம்ப நாட்களில், அபே பிரதமராக இருந்தபோது, ​​​​ நெருக்கடியை திறம்பட சமாளித்ததாகவும் மக்கள் செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர்.

1993 ஆம் ஆண்டில் அபே முதன்முதலில் சட்டமியற்றும் உறுப்பினராக நுழைந்த பாராளுமன்ற கட்டிடம் மற்றும் அவர் பிரதமராக நாட்டை வழிநடத்திய அலுவலகம் போன்ற முக்கிய அடையாளங்களை இவ்வாகனம் கடந்து செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அபே ஜப்பானின் போருக்குப் பிந்தைய நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் மற்றும் அதன் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளில் ஒருவராக இருந்தவர்.

அபேயை சுட்டவர் அங்கமாக இருந்த ஒரு ஒரு மதக் குழுவுடன் அபேவுக்கு இருந்த மனக்கசப்புகள் காரணமாக அவரை குறிவைத்ததாக குற்றவாளி காவல்துறையிடம்  கூறியதாக தெரிகிறது.

துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் மிகவும் அரிதான ஜப்பான் நாட்டில் இந்த தாக்குதல் அதிர்ச்சி அலைகளை அனுப்பியது.

திங்கட்கிழமை மாலை நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான பிரமுகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஜப்பானிய குடிமக்கள் மலர்கள் இடுவதற்கு வந்ததாக தெரிகிறது.

ஜப்பானியர்களுக்கு அவர் பெருமைப்பட வேண்டிய ஒன்றைக் கொடுத்தார் என்று நினைப்பதாகவும் அதனால் பூக்களை வழங்க வந்ததாகவும் குடிமக்களில் ஒருவர் கூறியுள்ளார்.

ஜப்பானின் மேல்சபைத் தேர்தலுக்கான வேட்பாளரை ஆதரித்து அபே  பிரச்சார உரையை ஆற்றிக்கொண்டிருந்தபோது  இருமுறை சுடப்பட்டார்.

அபேயை சுட்டவர் 41 வயதான டெட்சுயா யமகாமி எனவும் உலோகம் மற்றும் மரத்தால் செய்யப்பட்ட ஒரு தற்காலிக ஆயுதத்தைப் பயன்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலின் போது அபேயின் கழுத்தில் மற்றும் இதயத்தில் துப்பாக்கி காயம் ஏற்பட்டது. தாக்குதலுக்குப் பிறகு சில நிமிடங்களில் அவர் நினைவுடன்  இருந்ததாகக் கூறப்பட்டது.  ஆனால் அவர் சிகிச்சைக்காக மாற்றப்பட்ட நேரத்தில் முக்கிய அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

குற்றவாளியின் நோக்கம் என்ன, அவர் தனியாக செயல்பட்டாரா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

குற்றங்களுக்கும் அரசியல் வன்முறைக்கும் பழக்கமில்லாத நாடான ஜப்பானை இந்த துப்பாக்கிச் சூடு ஆழமாக உலுக்கியுள்ளது. சராசரியாக, ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் 10க்கும் குறைவான துப்பாக்கி தொடர்பான இறப்புகளே உள்ளன எனவும் துப்பாக்கிகளைப் பெறுவது மிகவும் கடினம் எனவும் மேலும் அனுமதி வழங்கப்படுவதற்கு முன் கட்டாயப் பயிற்சி, விரிவான பின்னணி சோதனைகள் மற்றும் உளவியல் மதிப்பீடு ஆகியவை தேவைப்படுவதாகவும் தெரிய வருகிறது.