அரசாங்கத்தில் இடம் தரவில்லை என்றால்...இலங்கைப் போராட்டக் குழுவின் எச்சரிக்கை!

அரசாங்கத்தில் இடம் தரவில்லை என்றால்...இலங்கைப் போராட்டக் குழுவின் எச்சரிக்கை!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர் பதவி விலக வேண்டும் என பல நாட்களாக அந்நாட்டு மக்கள் போராடி வருகின்றனர். அதிபருக்கு எதிரான போராட்டம் காலிமுகத் திடலில் நடைபெற்று வந்தது. கடந்த ஜூலை 9 ஆம் தேதி போராட்டக்காரர்களால் அதிபர் மாளிகை கைப்பற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிபர் அலுவலகம் உள்ளிட்ட சில முக்கிய அரசுக் கட்டடங்கள் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இலங்கை அதிபர், பிரதமர் உள்ளிட்டோர் பதவி விலக வேண்டும் இலங்கை அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்து வருகின்றனர்.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பதவியில் இருந்து விலகுவதற்காக ஜுலை 9ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு விட்டது என காலிமுகத் திடல் போராட்டக் குழு சார்பில் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார். இவர் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் மற்றும் இலங்கை அதிபருக்கு எதிரானப் போராட்டத்தில் முதன்மைப் பங்கு வகிக்கும் முன்னிலை சோசலிசக் கட்சியின் செயற்பாட்டாளரும் ஆவார்.

பதவி விலகுவதற்கான காலம் வழங்கப்பட்ட நிலையில், பதவியில் இருந்து விலகுவதற்கு ஏன் 13ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அடுத்து ஆட்சிக்கு வரும் எந்த ஆட்சியாளராக இருந்தாலும் அரசாங்கமாக இருந்தாலும் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருபவர்கள் இடம் பெறாத அரசாங்கமாக இருந்தால் பெரும் போராட்ட அலையைச் சந்திக்க நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார். 

அனைத்துக் கட்சிகளின் அரசாங்கம் எதுவும் தேவையில்லை என்பதை மற்ற அரசியல்வாதிகளுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். மற்றுமொருவரை பதவியில் அமர வைத்து வேடிக்கை பார்ப்பதற்காக நாங்கள் போராட்டத்தை நடத்தவில்லை இவ்வாறு அவர் கூறினார்.