திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் பிறைசூடன் காலமானார்..!

பேனாவையே சுமந்த கைகள் இன்று இறைவனடி இளைப்பாற சென்றது..!

திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் பிறைசூடன் காலமானார்..!

''நூறுவருசம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான் பேரு விளங்க இங்க வாழனும்''... ஒவ்வொரு திருமண வீட்டிலும் இன்றும் கூட ஒலிக்கும் இந்தப் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் ''கவிஞர் பிறைசூடன்''. ஏனோ தெரியவில்லை பிறரை நூறு வருடம் வாழ வேண்டும் என வாழ்த்திக் கொண்டிருந்தவர் தமது 65-வது வயதிலேயே இன்று நம்மை விட்டு பிரிந்திருக்கிறார். தமிழ் சினிமா திரையுலகில் பாடல்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. 3 மணி நேர படத்தில் கிட்டத்தட்ட 6 பாடல்கள் இடம் பெற்று விடும். பாடல்களுக்காகவே வெற்றி பெற்ற படங்களும் இங்குண்டு. அந்த பாடல்களை கவிதைகளாய் வழங்கும் பாடலாசிரியர்களை நாம் நினைவில் கொண்டதும், போற்றிப் புகழ்ந்ததும் குறைந்த பேரைத்தான். 

உதாரணமாக கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் புலமைப்பித்தன், வாலி, வைரமுத்து, நா.முத்துக்குமார், தாமரை, பா.விஜய் இப்படி ஒரு சிலரைத்தான் நாம் இன்றும் பாராட்டிக் கொண்டிருக்கிறோம். அந்த வரிசையில் கிட்டத்தட்ட ஆயிரம் திரைப்பட பாடல்களை எழுதி தள்ளிய கவிஞர் பிறைசூடனின் கைகள் இன்று ஏனோ எழுதுவதை விட்டு விட்டு உறக்கத்தை தேடி சென்றிருக்கிறது. திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 1956-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி பிறந்தவர் கவிஞர் பிறைசூடன். 1985-ல் வெளியான 'சிறை' என்றப் படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த ''ராசாத்தி ரோசாப் பூவே'' என்னும் பாடலை எழுதியதன் மூலம் தமிழ் திரைப்பட உலகில் பாடலாசிரியராக அடி எடுத்து வைத்தார். 

திறமை வாய்ந்தவர்களை சினிமா தனக்குள்ளே இழுத்துக் கொள்ளும் என்பதற்கிணங்க, கவிஞர் பிறைசூடனையும் தன்னுள் இழுத்துக் கொண்டது. எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பிறகு இளையராஜா இசையில் பல பாடல்களுக்கு வரி வடிவம்  கொடுத்தவர் கவிஞர் பிறைசூடன். 'ராஜாதி ராஜா' என்றப் படத்தில் புகழ்பெற்ற பாடலான ''மீனம்மா மீனம்மா'' பாடலை எழுதியவர் கவிஞர் பிறைசூடன். பணக்காரன் என்னும் படத்தில் ''நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான்'' என்ற திருமண வாழ்த்துப் பாடலை எழுதியவர் கவிஞர் பிறசூடன். 1990-களில் வெளியான இந்தப் படத்தில் இடம்பெற்ற இந்த வாழ்த்துப் பாடலை, கிட்டத்தட்ட 22 வருடங்கள் ஆகியும் கூட இன்று வரை எவராலும் இணையான ஒரு திருமண வாழ்த்துப் பாடலை இயற்ற எவருமே இல்லை. 

'நடந்தால் இரண்டடி, சோலப் பசுங்கிளியே, ஆட்டமா தேரோட்டமா, இதயமே இதயமே, காதல் கவிதைகள் படித்திடும் நேரம், என்னை தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி, வெத்தல போட்ட சோக்குல, ரசிகா, ரசிகா' என தழித் திரையுலகின் எவர் கிரீன் பாடல்கள் உட்பட கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர் கவிஞர் பிறைசூடன். திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி ஆயிரம் ஆயிரம் பக்தி பாடல்களையும் எழுதியுள்ளார். பாடல்களோட நிற்கவில்லை, படங்களுக்கு வசனம் எழுதவும் செய்தார் கவிஞர் பிறைசூடன். கடந்த 2011-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா மற்றும் நடிகை நயன் தாரா நடிப்பில் வெளியான ''ஸ்ரீராமராஜ்ஜியம்'' படத்திற்கு வசனம் எழுதியவர் கவிஞர் பிறைசூடன். 

அதுமட்டுமின்றி நூற்றுக்கும்  மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார் கவிஞர் பிறைசூடன். இப்படி கவிதைகளும், எழுத்துக்களும் எங்கெல்லாம் தேவைப் பட்டதோ அங்கெல்லாம் குடிபெயர்ந்தவருக்கு 2 முறை தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதுகளும், 2015-ம் ஆண்டு தமிழக அரசின் 'கபிலர்' விருதையும் பெற்றுள்ளார். எழுதுவதை தொடர்ந்து நடிப்பு பக்கமும் திரும்பினார் கவிஞர் பிறைசூடன். கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ''சதுரங்க வேட்டை'' என்றப் படத்திலும், 2016-ம் ஆண்டு வெளியான புகழ் என்றப் படத்திலும் நடித்தார். அதனை தொடர்ந்து ஆஸ்கர் விருதுக்கு இந்திய திரைப்படங்களை பரிந்துரைக்கும் குழுவில் சமீபத்தில் தான் கவிஞர் பிறைசூடன் இடம்பெற்றிருந்தார். 

இதுமட்டுமின்றி பல்வேறு பட்டிமன்றங்களுக்கும் தலைமை தாங்கினார் கவிஞர் பிறைசூடன். மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வந்தவர் திடீரென உயிரிழந்தது திரையுலகினரை சோகத்தில் மூழ்கியுள்ளது. எத்தனை காலம் தான் பேனாவோடும், பேப்பரோடுமே சுற்றுவாய் என்று நினைத்த கடவுள், சற்று காலம் என்னோடு வந்து ஓய்வு எடுத்துக் கொள் என்பதற்காக அவரை கூட்டிச் சென்றாரோ என்னவோ..!சென்னை நெசப்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள கவிஞர் பிறைசூடன் உடலுக்கு திரைப்பட இயக்குநர்கள் மற்றும் திரையுலக இசை கலைஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரையுலகில் பலரது மரணமும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கும். உதாரணமாக பாடலாசிரியர் நா.முத்துக்குமார், புகழ்பெற்ற கவிஞர் புலமைப்பித்தன், எஸ்.பி.பி., விவேக் இப்படி பலரை சொல்லலாம். இன்று இவர்களது வரிசையில் இணைந்து விட்டார் கவிஞர் பிறைசூடன்.