காவல்துறை உங்கள் நண்பன்; நண்பன் கடையில் டீ குடித்தால் காசு கொடுக்க வேண்டுமா?

காவல்துறை உங்கள் நண்பன்; நண்பன் கடையில் டீ குடித்தால் காசு கொடுக்க வேண்டுமா?
Published on
Updated on
2 min read

மருதமலை திரைப்படத்தில்  வடிவேலு, போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதில், கடைகளில் மாமூல் வசூலித்துக் கொண்டிருக்கும் பொழுது, பிச்சைக்காரர் ஒருவர் அதே கடைக்கு பிச்சைக் கேட்டு வருவார். அப்போது, இரண்டு பேருக்கும் பணம் கொடுக்கும் வகையில், கடைக்காரர் தனித்தனியே தூக்கி வீசுவார். பிச்சைக்காரர் அதை கேட்ச் பிடித்துவிடுவார், ஆனால் வடிவேலு தவற விட்டுவிடுவார். அதற்கு கடைக்காரர், "என்ன ஏட்டையா, ஒரு பிச்சைக்காரன் கரெக்ட்டா புடிக்கிறான், நீங்க பிடிக்கமாற்றிங்க" என்று நக்கலாக கூறுவார். அதாவது, காவலர் வெளிப்படையாக மாமூல் வசூலிப்பதும், இதில் மக்களுக்கு ஆவர் மேல் மரியாதை குறைபாடு உள்ளது போலவும் சித்தரிக்கப்பட்டிருக்கும்.

இதுபோன்ற நிலைமை தற்போது தமிழ் நாட்டில் நடந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. காவலர்கள், பணியின் போது, அவ்வப்போது இது போன்று, உணவகங்களில் சென்று உணவருந்திவிட்டு பணம் கொடுக்காமல் வருவது தொடர் கதையாகி வருகிறது. இதே போன்ற சம்பவம், காஞ்சிபுரம், படைப்பை பகுதியில் நடந்துள்ளது.

செங்கல்பட்டு அடுத்த கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், காவல் ஆய்வளராக பணியாற்றி வருகிறவர் விஜயலட்சுமி. இவர், காவலர் ஜெயமாலா, மற்றும் இரண்டு காவலர்கள் சேர்ந்து, இரவு ரோந்து செல்வது வழக்கம். வழக்கம் போல, இரண்டு நாட்கள் முன்பு, காஞ்சிபுரம் படைப்பை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அதே பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில், காவலர்கள் நான்கு பெரும், தேநீர் அருந்திவிட்டு, கடை விற்பனையாளரிடம் பணம் தர மறுத்ததாக புகார் எழுந்துள்ளது. 

சம்பந்தப்பட்ட உணவகத்தின்  உள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அக்காட்ச்சியில், விஜயலட்சுமி மற்றும் ஜெயமாலா விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது தெரிகின்றது. மேலும், கடையின் உரிமத்தை ரத்து செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக, கடையின் உரிமையாளர், மணிமங்கலம் காவல் நிலயத்தில் தகராறில் ஈடுபட்ட காவலர்கள் மீது புகார் அளித்தார்.

புகார் எழுந்ததையடுத்து, தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமலராஜ், சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினார். அதில், விஜயலட்சுமி மற்றும் ஜெயமாலா தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர், காவலர் விஜயலட்சுமி மற்றும் மற்ற மூன்று காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனரின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்ததால், இச்சம்பவத்தில் உடனடி தீர்வு காணப்பட்டிருந்தாலும், கண்ணுக்கு  தெரியாத இது போன்ற சம்பவங்கள், தொடர்ந்து காலம் காலமாக நடந்து வருவது காவல்துறையினரால் மறுக்க முடியாத  ஒன்றாகும். விசாரணைக்கு காவல்நிலையம் வரும் குற்றவாளிகள் கழிவறையில் வழுக்கி விழுவது, அதற்காக அவர்களுக்கு மாவுக்கட்டு போடுவது, அனைத்து ஆவணங்களும் சரியாக வைத்து, சீரான வேகத்தில் வாகனத்தை இயக்கினாலும், மடக்கி பிடித்து காவலர்களின் ஆற்றலை காட்டுவது, வழக்குக்காக கைது செய்யப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி அட்ராசிட்டி செய்வது போன்ற காரியங்களில் தமிழ் நாடு காவல்துறை சிறப்பாக ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இவற்றையெல்லாம் சரி செய்வதற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டால், காவல்துறை உண்மையிலேயே மக்களின் நண்பனாக விளங்க வாய்ப்புள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com