பி.டி.ஆருக்கும் ஜெயரஞ்சனுக்கும் இடையில் சிக்கி தவிக்கும் பாஜக,..ஸ்டாலினின் மாஸ்டர் பிளான்.!  

பி.டி.ஆருக்கும் ஜெயரஞ்சனுக்கும் இடையில் சிக்கி தவிக்கும் பாஜக,..ஸ்டாலினின் மாஸ்டர் பிளான்.!  

ஆட்சிக்கு வரும்முன்பே பாஜகவை கடுமையாக விமர்சித்த கட்சி திமுக, எதிர்க்கட்சியாக இருக்கும் போது மட்டுமே விமர்சிப்பார்கள், ஆட்சிக்கு வந்ததும் அடங்கிவிடுவார்கள் என்று தான் பாஜகவினர் எதிர்பார்த்தார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த முதல் நாளே ஒன்றிய அரசு என்று அழைத்து பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்தது திமுக. அதற்கு அடுத்ததாக அவர்கள் சொன்ன,செய்த விஷயங்கள் அனைத்தும் பாஜகவினருக்கு எரிச்சலை தான் வரவைத்தது.

அதன்பின் ஹிந்து கோவில்களை அரசிடம் கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்த ஜக்கி வாசுதேவை தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடுமையாக விமர்சித்தது பாஜகவினரை கோவம் கொள்ள வைத்தது. இதன் எதிர்விளைவாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, பழனிவேல் தியாகராஜனை கடுமையாக விமர்சித்து அவரது பின்னணி நோண்டப்படும் என்று கூறினார்.

இது அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் எச்.ராஜா குறித்த கேள்விக்கு வெறிப்பிடிச்ச நாய் குரைப்பதற்கெல்லாம் தன்னால் பதில்கூறமுடியாது என்று பதிலளித்தார் பழனிவேல் தியாகராஜன். இதுவரை பாஜக தலைவர்கள் மட்டுமே பயன்படுத்திய வார்த்தைகள் தங்களை திருப்பிஅடித்ததை பாஜகவினர் எதிர்பார்க்கவில்லை. 

அதன்பின் நடந்த ஜி.எஸ்.டி கூட்டத்தில் பழனிவேல் தியாகராஜனின் திறன் வெளிப்பட்டது. அங்கு புள்ளிவிவரங்களோடு ஒன்றிய அரசு பெரிய மாநிலங்களை வஞ்சிக்கிறது என்றும் ஜி.எஸ்.டி யால் மாநிலங்கள் பாதிக்கிறது என்றும் அவர் பேசிய பேச்சு இந்திய அளவில் கவனிக்கப்பட்டது. அவரது கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திணறியதாக கூறப்பட்டது. மேலும் வடஇந்திய ஊடகங்களே யார் இந்த பழனிவேல் தியாகராஜன் என்று தேடினர். 

இந்த விவகாரத்தில் பழனிவேல் தியாகராஜன் கோவா மாநிலத்தை அவமதித்துவிட்டார், கோவை மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ட்விட்டரில் கோரிக்கை வைக்க எனக்கு நேரவில்லை என்று கூறி வானதியை பிளாக் செய்தார் பழனிவேல் தியாகராஜன். அதன்பின் ஜி.எஸ்.டியால் கோவா பாதிக்கப்படுகிறது என்று விவரங்களோடு ட்விட்டரில் கூற கோவா இளைஞர்கள் அவரை கொண்டாடினர். இப்படி பல விதங்களில் பாஜகவுக்கு பழனிவேல் தியாகராஜன் குடைச்சல் கொடுக்க அவர்களுக்கு மற்றொரு தலைவலியாக பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் இருப்பார் என்று சொல்லப்படுகிறது.

கடந்த சில வருடங்களாகவே தொலைக்காட்சி விவாதங்களில் புள்ளிவிவரங்களோடு சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் பொருளாதாரத்தைப் புரியவைத்து வருகிறார் ஜெயரஞ்சன். இந்த விவாதங்களில் இவர் பாஜகவை புள்ளிவிவரங்களோடு விமர்சிப்பது பாஜகவினரை பல முறை எரிச்சலுக்குள்ளாக்கி வருகிறது. மேலும் அந்த விடீயோக்கள் சமூகவலைத்தளங்களில் பரவி பாஜகவுக்கு தொல்லையாகவும் இருந்தது. 

இந்நிலையில் பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சனை திட்டக்குழு செயல்குழு துணை தலைவராக அறிவித்தார் முக ஸ்டாலின். இவரும் பழனிவேல் தியாகராஜன் ஆகிய இருவருமே பாஜகவுக்கு அஞ்சாமல் துணிச்சலாக பேசுபவர்கள். ஜி.டி.பி,  ஜி.எஸ்.டி என மக்களுக்கு புரியாமல் இருந்த பொருளாதாரத்தை இது எல்லாம் இவ்வளவு தான் என்று சொல்லி புரியவைத்தவர்கள். மேலும் ஒன்றிய அரசின் தவறுகளையும், தங்கள் மாநிலத்துக்கு தேவை இதுதான் என்றும் நேரடியாக கூறும் அளவு பொருளாதாரத்தில் அறிவை பெற்றவர்கள்.

இப்படி இருவரும் தற்போது அரசின் முக்கிய பதவிகளில் இருப்பதால் தமிழகத்தை இனியும் புறக்கணிக்க முடியாத நிலை மத்திய அரசுக்கு ஏற்படும். அப்படியே புறக்கணிப்பு தொடர்ந்தால் அதை மக்களுக்கு புரியும் வகையில் சொல்ல இருவரும் இருக்கிறார்கள். இதன் காரணமாக இனியும் ஒன்றிய அரசு தமிழகத்தை புறக்கணிக்காது என்று நம்பலாம்.