திமுகவின் ஸ்லீப்பர் செல் தான் புகழேந்தி,.. அதிமுகவிலிருந்து திடீரென வெளியே துரத்தியதன் பின்னணி இதுதான்.!  

திமுகவின் ஸ்லீப்பர் செல் தான் புகழேந்தி,.. அதிமுகவிலிருந்து திடீரென வெளியே துரத்தியதன் பின்னணி இதுதான்.!  

அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரும், ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளருமான வா.புகழேந்தி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டிருப்பது அதிமுகவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணமாக பாமகவை புகழேந்தி விமர்சித்திருப்பது கூறப்பட்டாலும், அவர் திமுக தலைமையோடு தொடர்பிலிருந்ததே நீக்கத்திற்கு காரணம் என்று தற்போது கூறப்படுகிறது.

அதிமுகவிலிருந்து டி.டி.வி.தினகரன் நீக்கப்பட்டதும் அவரோடு சென்ற அதிமுக தலைவர்களில் முக்கியமானவராக இருந்தவர் பெங்களூர் புகழேந்தி. பின் தினகரனோடு ஏற்பட்ட மோதல் காரணமாக அமமுகவிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அப்போதிலிருந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட இவருக்கு செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது. அதன்பின் அதிமுக சார்பில் ஊடக விவாதங்களில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். 

இந்நிலையில், திடீரென அதிமுகவிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இது பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் நீக்கத்துக்கு இரண்டு காரணங்கள் சொல்லப்பட்டது. அதில் ஒன்று சசிகலாவை விமர்சித்து பேசிய கே.பி.முனுசாமிக்கு எதிராக பேசியிருந்தார். அதோடு அதிமுகவை விமர்சித்த பாமக அன்புமணியை கண்டித்து' ஓ.பன்னீர்செல்வம் கையொப்பம் போட்டதால்தான் இன்று அன்புமணி ராஜ்யசபா எம்.பியாக இருக்கிறார் ' என்று காட்டமாக கூறினார். 

மேற்கூறிய இரண்டும் தான் நீக்கத்திற்கு காரணமாக சொல்லப்பட்டது என்றாலும் தற்போது அவர் திமுகவுடன் நெருங்கிய தொடர்பிலிருந்ததே இந்த நீக்கத்துக்கு காரணம் என்று எடப்பாடி தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து எடப்பாடி ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், புகழேந்தி திமுக ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். அவர் பேசச் சொல்வதையே புகழேந்தி தொலைக்காட்சி ஊடகங்களில் கூறிவந்தார். மேலும் அவரின் கருத்து மூலம் எடப்பாடி, பன்னீர்செல்வம் இடையே மோதலை தொடர்ந்து வளர்த்து வந்தார். இப்படி அதிமுகவில் திமுகவின் ஸ்லீப்பர் செல்லாக இருந்ததை அறிந்த எடப்பாடி, அதற்காக ஆதாரங்களை பன்னீர்செல்வத்திடம் அளித்தபின்னர் தான் அவரை நீக்கும் முடிவுக்கு பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டுள்ளார் என்று கூறினார். இதன் காரணமாகவே அவர் நீக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் தற்போது அதிமுகவில் ஒலித்துவருகிறது.