லண்டனில் ராகுல்... இந்தியாவை அவதூறு செய்பவர் இந்தியப் பிரதமரே...!!!

லண்டனில் ராகுல்... இந்தியாவை அவதூறு செய்பவர் இந்தியப் பிரதமரே...!!!
Published on
Updated on
2 min read

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி லண்டனில் தற்போது லண்டனில் இருக்கிறார்.  கல்லூரியில் சிறப்பு விரிவுரையாளராக பங்கேற்க சென்ற ராகுல் காந்தி ஆளும் பாஜகவையும்  பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

லண்டனில் ராகுல்:

சிறப்பு விரிவுரையாளர் நிகழ்வை முடித்த ராகுல் காந்தி லண்டனில் நடைபெற்ற இந்திய பத்திரிகையாளர்கள் சங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்திய ஒற்றுமை பயணம், சீனா மற்றும் ரஷ்யா மீதான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, பிபிசி ஆவணப்படத்திற்கு தடை, வரவிருக்கும் பொதுத் தேர்தல்கள் தொடர்பான கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.  பார்வையாளர்களில் பெரும்பாலும் இந்தியா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் பலர் இருந்தனர்.

இந்தியாவில் ஊடக ஒடுக்குமுறை:

இந்தியாவில் மக்களின் குரல் எங்கும் நசுக்கப்படுகிறது எனவும் இதற்கு உதாரணம் பிபிசி ஆவணப்படம் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.  மேலும் அரசுக்கு எதிராக பிபிசி செய்தி வெளியிடுவதை நிறுத்தினால், அதன் மீதான வழக்குகள் மறைந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து பேசிய இந்தியாவில் பிபிசி இந்த அடக்குமுறையை தற்போது அனுபவித்து வருவதாகவும், ஆனால் கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்தியாவில் ஊடகங்கள் ஒடுக்கப்பட்டு வருவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  பத்திரிக்கையாளர்கள் மிரட்டப்படுவதாகவும் தாக்கப்படுவதாகவும் கூறிய ராகுல் அரசு பற்றி பேசும் பத்திரிகையாளர்களுக்கு வெகுமதி அளிக்கிறது எனவும் கூறியுள்ளார்.

இந்தியாவை இழிவுபடுத்தும் குற்றச்சாட்டுகள்:

ராகுல் காந்தி வெளிநாடு சென்று இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்த முயற்சிப்பதாக பாரதிய ஜனதா கட்சி நீண்ட நாட்களாக குற்றம்சாட்டி வருகிறதே இதைக் குறித்து ராகுலின் கருத்து என்ன என அவரிடம் கேட்கப்பட்ட போது கடந்த 60 ஆண்டுகளில் இந்தியா எதையும் செய்யவில்லை என்றும், தனது அரசு வருவதற்கு முன்பே நாட்டில் ஊழல் தலைவிரித்தாடுவதாகவும் பிரதமர் மோடி கூறி வருவதாக தெரிவித்த ராகுல் காந்தி இவ்வாறு கூறி வருவதன் மூலம், இந்தியாவை வலிமையாக்கப் பங்காற்றிய கடின உழைப்பாளிகள் அனைவரையும் பிரதமர் மோடி அவமதித்துள்ளார் எனக் கூறியுள்ளார்.  மேலும் வெளிநாடுகளுக்குச் சென்று இந்தியாவை அவதூறு செய்பவர் இந்தியப் பிரதமரே எனவும் எனது நாட்டை நான் ஒருபோதும் அவமதிக்கவில்லை எனவும் அவ்வாறு ஒருபோதும் செய்ய மாட்டேன் எனவும் ராகுல் காந்தி தெளிவாக கூறியுள்ளார்.

அமைப்பை எதிர்த்து போராடுகிறது:

இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, உறுதியாக இணைந்து செயல்படுகின்றன எனக் கூறிய ராகுல் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவுக்கு எதிராக போராடி அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளுக்குள் ஆழமாக வேரூன்றியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.  மேலும் இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் இனி எந்த அரசியல் கட்சியுடனும் போராடுவதில்லை, மாறாக நாங்கள் இந்தியாவின் நிறுவன கட்டமைப்பை எதிர்த்துப் போராடுகிறோம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். இந்தியாவின் அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றிய பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸுக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

அதானி குறித்து:

செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, அதானி குழுமத்தைக் குறித்து பேச மறந்து விடவில்லை. அதானி குழுமம் தொடர்பாக இந்தியாவில் ஆளும் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக பல கடுமையான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார்.  கடந்த 3 ஆண்டுகளில் 609வது பெரிய பணக்காரராக இருந்த அவர் திடீரென உலகின் 2வது பெரிய பணக்காரர் என்ற பெருமையை கவுதம் அதானி பெற்றுள்ளதாகவும், இதற்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவருக்கு நல்ல உறவு இருப்பதே என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பாஜக கண்டனம்:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு பதிலளிக்கும் வகையில் ராணுவத்தையும், தியாகிகளையும் அவமதிப்பதே காங்கிரஸின் அடையாளம் என்றும் புல்வாமா தாக்குதலை முதலில் கார் வெடிகுண்டு என்று கூறி மூடி மறைத்த ராகுல் காந்தி, பின்னர் புல்வாமா தியாகிகளின் குடும்பங்களை அவமதித்தார் எனத் தெரிவித்துள்ளது.

ராகுல் காந்தி குறித்து பேசிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ''மீண்டும் ஒருமுறை அந்நிய மண்ணில் அழும் வேலையை ராகுல் காந்தி செய்து வருகிறார் எனவும் இந்தியாவை அவமதித்து வருகிறார்” எனவும் பேசியுள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com