
இராசீவ் கொலை வழக்கில் பன்னாட்டு சதி தொடர்பாக விசாரித்து வந்த எம்.டி.எம்.ஏ(பன்னோக்கு விசாரணை ஆணையம்) எனும் பூச்சாண்டி புலனாய்வு அமைப்பு கடந்த மே மாதமே கலைக்கப்பட்டுவிட்டதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
அச்ச உணர்வை ஏற்படுத்த பயன்பட்டது
கிட்டதட்ட 24 ஆண்டுகள் எவ்விதமான புதிய கண்டுபிடிப்புகளையும் இராசீவ் வழக்கில் கண்டறியாமல் காலத்தைக் கடத்தியதோடு மக்களின் வரிப்பணத்தை பெருமளவு செமித்துள்ளது. இதுவரை இந்த புலனாய்வு அமைப்பின் துணை கொண்டு எழுவர் விடுதலையை தடுக்கவும், இராசீவ் கொலையைக் காட்டி தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் மீதான பயங்கரவாத அச்ச உணர்வை ஏற்படுத்தவும் ஒன்றிய அரசு செய்து வந்தது. தற்போது அது கேள்வி கேட்பாரின்றி கலைக்கப்பட்டிருக்கிறது.
இராசீவ் கொலை விசாரணை என்பது ஆட்சி அதிகார மட்டத்தில் முன்னமே முடிவு செய்யப்பட்டு நடத்தப்பட்ட ஒன்று ; அதனால் பலனடைந்தவர்கள் பற்றிய விரிவான தகவல்களை உள்ளடக்கிய நூல் ஒன்றை ஊடகவியலாளர் பராஷ் அகமது ராஜீவ் படுகொலை(Rajiv assassination An inside job) எனும் நூலில் விரிவாக எழுதியிருக்கிறார்.
முழுமையடையாத விசாரணை
ஆனால் இராசீவ் கொலை விசாரணை ஒரு முழுமை அடையாமலே முடித்து வைக்கப்பட்டிருக்கிறது என்பது எம்.டி.எம்.ஏ கலைப்பின் மூலம் உறுதியாகிறது.இந்தக் கொலை வழக்கின் குற்றவாளிகளாக குற்றஞ்சாட்டப்பட்ட எழுவர் தற்போது அறுவர் 32 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொடுமை இன்னும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
குசராத் பில்கிஷ் பானு கூட்டுப் பாலியல் வன்முறை மற்றும் அவரோடு இருந்தவர்கள் கொலை வழக்கில் 18 ஆண்டுகள் தண்டனை பெற்ற கைதிகள் ஒன்றிய அரசின் ஒப்புதலின் காரணமாக விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும்
இராசீவ் வழக்கைப் போலவே தடா பிரிவு வழக்கு , ஒன்றியப் புலனாய்வு பிரிவு விசாரித்த வழக்கு என ஒற்றுமைகள் இருந்தபோதிலும் தண்டனைக் குறைப்பு , முன் விடுதலை கோரிக்கையில் ஒன்றிய அரசு இந்துத்துவ வெறி கொலை காரர்களுக்கு இரக்கம் காட்டுவதும் இராசீவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வர்கள் மீது இரக்கமற்ற பாகுபாட்டை கடைபிடிப்பதும் தெரிகிறது.
அரசியல் சட்ட அடிப்படையில் மாநில அமைச்சரவையின் தீர்மானத்தை இனிமேலும் ஆளுநர் காலந்தாழ்த்துவதும் , ஆறு தமிழர்கள் விடுதலை மேல்முறையீட்டு வழக்குகளில் முட்டுக்கட்டைப் போடுவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். இராசீவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தமிழர்கள் விடுதலைக்கு ஒன்றிய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
- குமரன்
(அரசியல் செயற்பாட்டாளர்)
பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் கருத்து கட்டுரையாளருடையது. நிறுவனத்தின் கருத்தல்ல.