அதிமுக-வில் இணையும் திவாகரன்...சசிகலா அறிக்கை!

அதிமுக-வில் இணையும் திவாகரன்...சசிகலா அறிக்கை!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்த பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே காலக்கட்டத்தில், ஓ.பி.எஸ் தர்ம யுத்தம் நடத்தியதால் அதிமுக இரண்டாக பிளவுபட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இருப்பினும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவோடு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா பரப்பன்ன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து நடந்த அரசியல் நகர்வில், மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தரப்போடு ஓ.பன்னீர்செல்வம் இணைந்து ஓரணியாக செயல்பட்டார். தொடர்ந்து, சசிகலாவையும் தினகரனயும் அதிமுகவில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டாக அறிவித்தனர். இதற்கான, தீர்மானம் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது. இந்த அரசியல் சூழலில், தினகரனுடன் ஏற்பட்ட மோதலால், சசிகலாவின் சகோதரர் திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார். 


இந்நிலையில், சிறையில் இருந்து மீண்டு வந்த சசிகலா, தன்னை அதிமுகவின் பொதுச்செயலாளர் என்றும், அதிமுகவை மீண்டும் கைப்பற்றுவேன் எனவும் கூறி தொண்டர்களை சந்தித்து வருகிறார். இதனால், சசிகலா தலைமையிலான அதிமுகவுடன் தன்னுடைய அண்ணா திராவிடர் கழகம் கட்சியை இணைத்துக்கொண்டு அரசியல் பயணத்தை தொடரப்போவதாக திவாகரன் அறிவித்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சசிகலா வெளியிட்டுள்ளார். தஞ்சையில் நாளை மறுநாள் நடைபெறும் நிகழ்ச்சியில் காலை 11 மணிக்கு இரு கட்சிகளின் இணைப்பு விழாவும் நடைபெற உள்ளதாக சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com