மது நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு.....! அரசுக்கு?

மது நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு.....! அரசுக்கு?

தென்காசி: தென்காசி அருகே, மதுபோதையில், மதுவுக்காக தந்தையை தாக்கியுள்ளார் மகன் ஒருவர்.

தமிழகத்தில் அவ்வப்போது மது பிரியர்களின் சிறப்பான சம்பவங்கள் நிகழ்ந்து வருவது தொடர்கதையாகும். மதுக்காக ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வது, திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவது, வழிப்பறி செய்வது, மது அருந்திவிட்டு சாலையில் விழுந்து கிடப்பது போன்ற அவல நிலை தொடர்ந்து நடந்துகொண்டு தான் இருக்கிறது. 

இந்த வரிசையில் மற்றொரு நிகழ்வு நடந்துள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (50). கூலித்தொழிலாளியான இவருக்கு மனோஜ்குமார் என்றொரு மகன் இருக்கிறார். இவர், வீட்டில் ஒரு மது பாட்டிலை மறைத்து வைத்திருந்துள்ளார். அதை, சில சமயம் கழித்து பார்த்தபொழுது, காணவில்லை. அப்பொழுது, தனது தந்தை எடுத்திருக்கலாம் என சந்தேகித்த மனோஜ் குமார், தனது தந்தையை தாக்கியுள்ளார். கல்லால் தாக்கியதில், காயமடைந்த ஆறுமுகம் அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என மது பாட்டில்களிலே அரசு எழுதி விற்றாலும், அதனை வெறியோடு வாங்கி குடிக்கும் மது பிரியர்கள், அந்த வாசகத்தை வாசிப்பது கூட இல்லை. மதுவை அருந்தி விட்டு, பின்பு அவர்கள் நடத்தும் அசம்பாவிதங்கள் பற்றியும் யோசிப்பதில்லை. 

நல்ல மனநிலையில் கணவன்மார்கள் இருக்கவேண்டும் என மனைவிமார்கள் நினைத்தால், அவர்களின்  மனநிம்மதியை கெடுக்கும் வகையில், மது தனது காட்டத்தை மது பிரியர்கள் மேல் காட்டுகிறது. அந்த போதையில், தான் என்ன செய்கிறோம் என்று கூட தெரியாமல் செய்யும் தவறுகளுக்கு, போதை தெளிந்த பின்பு வருந்துபவர்களும் உண்டு. 

இவ்வளவு பிரச்சனைகளை நாடும், நாட்டு மக்களும் சந்தித்தாலும், மதுவை மட்டும் அரசு தடை செய்யாமல் இருப்பது ஏன் என சமூக ஆர்வலர்கள் கொந்தளிக்கின்றனர். தமிழக அரசு, இந்நிலையை கவனத்தில் எடுத்துக்கொள்ளுமா, அல்லது மது பிரியர்கள், எச்சரிக்கை வாசகத்தை கவனிக்காமல் இருப்பது போல், கண்டுகொள்ளாமல் இருக்குமா ?