அண்மையில் தமிழக பாஜகவின் கூட்டம் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. அதில் பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி. ரவி கலந்துகொண்டார். அந்த கூட்டத்தில் பாஜக கட்சித் தலைவர்கள் மீது பாலியல் புகார்கள் அதிகமாக வருகிறது என்றும், இனி அப்படி புகார்கள் வந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்ததாக தனியார் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால் அந்தக் கூட்டத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று தமிழக பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும் பாஜக சார்பில் அந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகைக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டது. இந்த விவகாரம் தமிழக அளவில் தீவிரம் எடுக்கவே அந்த பத்திரிகையை கண்டித்து பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தவேண்டும் என்றும், பத்திரிகையின் பிரதிகள் எரிக்கப்பட வேண்டுமென்றும் சிலர் கோரிக்கை வைக்க அப்படியெல்லாம் செய்து இதை பெரிதாக்க வேண்டாம் என்று பாஜக தலைமை கூறியுள்ளது.
இதைத் தொடர்ந்து பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார், அதில் “தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் விருந்தோம்பல் செய்யும் மையமாக மாறிவிட்டது”என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் தமிழக பாஜகவில் என்ன நடக்கிறது என்பது குறித்து விரிவான அறிக்கையை பாஜக மேலிடம் கேட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது. அந்த அறிக்கையின் பாஜக தலைவர் முருகன் மற்றும்இதர பாஜக நிர்வாகிகள் மாற்றப்படலாம் என்றும் தமிழக பாஜக பிரமுகர்கள் மத்தியில் பேச்சாக இருக்கிறது. அதேநேரம் தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள பாஜக தலைவர் எல்.முருகன் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.