புனித ஜார்ஜ் கோட்டையும்...காதலும்!!

புனித ஜார்ஜ் கோட்டையும்...காதலும்!!

சுற்றுலா, மருத்துவம், தொழில்நுட்பம் என உலகின் கண்கள் அதிகம் பார்க்கும் சென்னை மாநகரம், ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி உருவாக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. ஆனால், வணிகம் செய்ய வந்த கிழக்கிந்தியக் கம்பெனி கட்டிய கோட்டையின் பின்புலத்தில் ஒரு காதல் உள்ளது.

இப்போது தலைமைச் செயலகமாக இருக்கும் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டியவர் பிரான்சிஸ் டே என்கிற ஆங்கிலேய அதிகாரி. அவரது காதலில் உருவான சென்னையின் கதையை அறிய 380 ஆண்டுகளுக்கு மேல் பின்னோக்கிச் செல்ல வேண்டும். அப்போது கூவம் நதியும், பக்கத்தில் சில பனை மரங்களும் மட்டுமே முளைத்திருந்து, கடல் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த மீனவ கிராமமான களர் நிலமே மதராசப்பட்டினம். அதை விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் மிச்சசொச்ச ஆளுகையை வைத்திருந்த சென்னப்ப நாயக்கர் கையில் இருந்து வாங்கினார் பிரான்சிஸ் டே. 

நிலத்தை வாங்கிய கையுடன் பிரான்சிஸ் டே ஒரு கோட்டையைக் கட்டி அங்கு வசிக்கத் தொடங்கினார். அதற்கு கிழக்கிந்திய கம்பெனியில் இருந்து ஆட்சேபனைகள் எழுந்தன. ஆனால் அதைக் கண்டுகொள்ளாமல் கோட்டையைக் கட்டினார் பிரான்சிஸ்டே. சென்னை, இயற்கையான துறைமுகம் அமைப்புள்ள இடம் அல்ல. அதன் களர்நிலம் விவசாயம் செய்யக்கூட தகுதியானது அல்ல. ஆனால், கோட்டையைக் கட்டி அங்கொரு நிலைத்த இடத்தை நிறுவுவதில் பிரான்சிஸ் டே உறுதியாக இருந்தார். அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், அவரது காதலி சாந்தோமில் இருந்ததையும் ஒரு காரணமாக சில வரலாற்று ஆசிரியர்கள் காட்டுகின்றனர். 

எது எப்படியோ, 1640-ல் இப்போதிருக்கும் அரசினர் தோட்டம் முழுவதையும் சுற்றி பிரான்ஸ்டே ஒரு கோட்டையைக் கட்டினார். அதற்குள் தேவாலயம் ஒன்றையும், மாளிகை ஒன்றையும் நிறுவினார். பின்னர் அங்கே இருந்த ஆங்கிலேயர்கள் சிலர் அதிக காசு கொடுத்து உள்ளே வீடுகட்டிக்கொள்ள உரிமம் பெற்றனர். பின்னர் அந்தக் கோட்டை விரிவடைந்து, கொஞ்சம் கொஞ்சமாக சுற்றியிருந்த கிராமங்களை நகரமயம் செய்தது. 

இன்று சென்னைக்கு மிக அருகில் என்று செங்கல்பட்டுவரை நீள்கிறது, பிரான்சிஸ்டே தன் காதல் நிலைக்க உருவாக்கிய சின்னக் கோட்டையின் எல்லை. அதுதான் சென்னை.