காவல் துறை மற்றும் தமிழக அரசின் மீது அனல் கக்கிய அண்ணாமலை...அறிக்கை சொல்வது என்ன?

காவல் துறை மற்றும் தமிழக அரசின் மீது அனல் கக்கிய அண்ணாமலை...அறிக்கை சொல்வது என்ன?

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக அண்ணாமலையை கண்டித்து காவல்துறை பத்திரிக்கை செய்தியை வெளியிட்டது. அதற்கு பதிலளிக்கும் வகையில், அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசின் மீது அண்ணாமலை குற்றச்சாட்டு:

கோவை கார் வெடிப்பு சம்பவம் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றதையடுத்து தமிழகம் முழுவதும் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இது குறித்து கடந்த 18ம் தேதியே மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும், ஆனால், அதனை உளவுத்துறை  கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் தெரிவித்து இருந்தார்.

காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கோவை சம்பவம் தொடர்பாக அண்ணாமலை கூறியது அபத்தமானது என்றும், அவர் குறிப்பிட்டதுபோல் மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து வந்தது பொதுவான சுற்றறிக்கை என்றும் தமிழக காவல் துறை கருத்து தெரிவித்தது. மேலும், கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் காரில் இருந்து சேகரிக்கப்பட்ட பொருட்கள் என்ன என்பதை ஆய்வு செய்யும் முன்பே அண்ணாமலை பல்வேறு கருத்துக்களை கூறி வழக்கை திசை திருப்ப முயற்சித்தாகவும் காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

விரைவில் பதில் அண்ணாமலை ட்வீட்:

இதற்கு பதிலளிக்கும் விதமாக, ‘காவல் துறை வெளியிட்ட பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொன்றுக்கும் தகுந்த பதில் விரைவில் வழங்கப்படும்' என்று தனது ட்விட்டர் பக்கத்தில்  அண்ணாமலை கூறி இருந்தார்.

அண்ணாமலை அறிக்கை வெளியீடு:

இந்நிலையில், நேற்று கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல் துறை வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பல்வேறு கேள்விகளை எழுப்பி 10 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "தமிழக காவல்துறையா? அல்லது அறிவாலயத்தை காக்கும் துறையா?..." என்ற பத்தியுடன் தொடங்கப்பட்டுள்ள அந்த அறிக்கையில், நான் பல்வேறு கருத்துக்களை கூறி விசாரணையின் போக்கை திசை திருப்ப முயற்சிப்பதாக, காவல் துறை தலைமையகத்தில் இருந்து வெளியான பத்திரிகை செய்தி குறிப்பிடுகிறது. 

ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி என்கின்ற முறையில் ஆளும் அரசினை கேள்வி எழுப்புவதும், மக்களிடம் உண்மையை கொண்டு சேர்ப்பதும் எங்களது பொறுப்பாக உணர்கிறோம். அதை கூடாது என்பதற்கு காவல் துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கூறிய அவர், டிஜிபி சைலேந்திர பாபு ஒரு காவல் அதிகாரி தான். ஒரு சர்வாதிகாரியாக நினைத்துக்கொள்ள வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, விசாரணையின் போக்கை திசை திருப்புவதாக நான் கருத்துக்கள் சொன்னதாக குற்றம் சாட்டிய காவல்துறைக்கு, நான் சொன்ன கருத்துக்கள் என்ன என்பதை குறிப்பிடுகிறேன் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதாவது, 

23ம் தேதி அதிகாலை கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி என்ற செய்தி வந்தது 23ம் தேதி மதியம் இதை பற்றி பதிவிட்டிருந்த நான் காவல் துறை உடனடியாக தீவிர விசாரணையில் இறங்கியதை பாராட்டினேன். மற்றும் இந்த வெடி விபத்தில்" இருக்கும் மர்மத்தை காவல்துறை விலக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தேன்.

ஆனால் 23ம் தேதி இரவு, கோவை விபத்து வெறும் சிலிண்டர் விபத்து இல்லை. இது தீவிரவாத சதிச்செயல். இதை மேற்கொண்ட நபருக்கு ISIS என்கிற தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்தது என்று நான் பதிவிட்டு இருந்தேன். இதை தமிழக காவல்துறை மற்றும் தமிழக அரசு மறுக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து, சுமார் 24 மணி நேரம் காத்திருந்த பிறகு காவல் துறையிடம் இருந்தோ தமிழக அரசிடம் இருந்தோ எவ்வித தகவலும் வராததால் 24ம் தேதி இரவு, கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து, 36 மணி நேரம் ஆன பிறகும் தமிழ்நாடு முதலமைச்சர் இதை பற்றி பேச மறுப்பது ஏன்? என்ற கேள்வியையும் முன்வைத்தேன்.

இதுவரை தமிழ்நாடு முதலமைச்சர் மவுனம் காப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இந்த துறைக்கு தொடர்பு இல்லாத சாராய அமைச்சர் கோவையில் நடந்த தற்கொலை படை தாக்குதலை பற்றி பேசினார். ஊழல் செய்வது எப்படி? என்பதை மட்டுமே அறிந்த இவருக்கும், உள்துறைக்கும் என்ன தொடர்பு?

தனிப்படை அமைத்து விசாரித்து கொண்டு இருக்கிறோம் என சொல்லும் காவல் துறை அடுத்தகட்ட உண்மைகளை சொல்ல தயங்குவது ஏன்? இதுவரை இது, ஒரு தீவிரவாத சதி செயல் என, சொல்ல மறுப்பது ஏன்? இவ்வாறு தமிழக காவல்துறை மீதும், தமிழக அரசின் மீதும் பல்வேறு கேள்விகளை தொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com