நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியினர் பெரிய அளவிலான மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளனர்.
பழங்குடியின தலைவரான பிர்சா முண்டாவின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையிலும், பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பை நினைவுகூரும் வகையிலும், கடந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி ஆண்டுதோறும் 'பழங்குடியினர் பெருமை தினமாக' கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
பழங்குடியினரையும் அவர்களின் பங்களிப்பையும் அங்கீகரிப்பதற்காகவும், நாட்டிற்காக அவர்கள் ஆற்றிய தியாகங்களை வருங்கால சந்ததியினருக்கு உணர்த்துவதற்காகவும் நவம்பர் 15ஆம் தேதியை பழங்குடியினர் பெருமை தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய சிறந்த சுதந்திரப் போராட்ட வீரரும் சமூக சீர்திருத்தவாதியுமான பிர்சா முண்டாவின் பிறந்தநாள் நவம்பர் 15 ஆகும்.
பிர்சா முண்டா இவர் ஆங்கிலேய அரசிடமும், உள்நாட்டு நிலவுடமைதாரர்களிடமும் அடிமைப்பட்டிருந்த பழங்குடி மக்களுக்காகப் போராடிய முதல் வீரர் ஆவார். தற்போதைய பீகார், ஜார்கண்ட் பகுதி பழங்குடி இனமக்களின் போராட்டத்திற்கு இந்திய விடுதலை இயக்கக் காலமான 19ஆம் நூற்றாண்டிலேயே வித்திட்டவர் பிர்சா.
ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் உள்ள பகவான் பிர்சா முண்டாவின் பூர்வீக கிராமமான உலிஹாட்டுவில், நவம்பர் 15 நடைபெறவுள்ள இரண்டாவது பழங்குடியின பெருமை தினத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் குடியரசுத் தலைவர் த்ரௌபதி முர்மு பங்கேற்பார் என்று மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.