குஜராத் கலவர வழக்கும் தீர்ப்பும் ஒரு பார்வை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஹ்சன் ஜாஃப்ரி கலவரக்காரர்களை கட்டுப்படுத்தக் கோரி காவல் துறை உயர் அதிகாரிகளையும் அப்போதைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

குஜராத் கலவர வழக்கும் தீர்ப்பும் ஒரு பார்வை

2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் நாள் அயோத்திக்குச் சென்றுவிட்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த சபர்மதி விரைவு ரெயிலில்  விஷ்வ ஹிந்து பரிஷத் தொண்டர்களும் சில ராம பக்தர்களும் பயணம் செய்தனர். அந்த ரெயில் கோத்ரா இரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத நபர்களால் அந்த ரெயில் பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பெட்டியில் இருந்த 70 பேர் கொல்லப்பட்டனர்.

முஸ்லிம்களுக்கு எதிராக பரப்பப்பட்ட வதந்தி

அந்தச் சம்பவம் திட்டமிட்டு நடந்ததா அல்லது தீ விபத்தா என விசாரணையில் தெரிய வரும் முன்பே, இதை முஸ்லிம்கள் தான் செய்தனர் என வதந்திகள் பரப்பப்பட்டது. இதனால் குஜராத் முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. வி.எஹெச்.பி, பஜ்ரங் தள் அமைப்புகளால் முஸ்லிம்களை குறி வைத்து கொலை, கொள்ளை மற்றும் முஸ்லிம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் நடத்தப்பட்டது.

அதில் ஒரு பகுதியாக முஸ்லிம் மக்கள் கூட்டாக வாழும் பல குடியிருப்புகள் வி.எஹ்.பி அமைப்பினரால் எரிக்கப்பட்டது. குல்பர்க் குடியிருப்பு, நரோடா பாட்டியா போன்ற இடங்களில் நடந்த படுகொலைகள் குறிப்பிடத் தகுந்தவையாகும்.

குல்பர்க் குடியிருப்பு படுகொலை

குல்பர்க் சொசைட்டி என்று அழைக்கப்படும் குடியிருப்பு வளாகத்தில் 29 பங்களாக்களும், 10 அடுக்குமாடி குடியிருப்புகளும் இருந்தது. இந்தக் குடியிருப்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஹ்சன் ஜாஃப்ரியும் வசித்து வந்தார். பிப்ரவரி 28, 2002 அன்று  காலை அந்தக் குடியிருப்புக்கு முன்பு கூடி ஒரு கும்பல் கோசங்களை எழுப்பிக் கொண்டிருந்தது.

எஹ்சன் ஜாஃப்ரி கலவரக்காரர்களை கட்டுப்படுத்தக் கோரி காவல் துறை உயர் அதிகாரிகளையும் அப்போதைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

பிப்ரவரி 28, 2002 அன்று மதியம் குல்பர்கா குடியிருப்பு வளாக நுழைவுவாயிலை உடைத்துக் கொண்டு 1000க்கும் மேற்பட்ட கலவரக்காரர்கள் உள்ளே நுழைந்தனர். அங்கிருந்த பல வீடுகளுக்கு அவர்கள் தீ வைத்து எரித்தனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஹ்சன் ஜாஃப்ரி உள்ளிட்ட பலர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர்.

குல்பர்க் குடியிருப்பில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 பேர், கலவரத்தில் காயம்பட்டவர்கள் 100க்கும் மேற்பட்டோர் எனக் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதற்கும் மேல் இருக்கலாம்.  

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை

2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குல்பர்க் குடியிருப்பு படுகொலைக்கு காரணமான முதலமைச்சர் நரேந்திர மோடி உள்ளிட்ட 63 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என கொல்லப்பட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான எஹ்சன் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜஃப்ரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஜாகியா ஜாஃப்ரி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  

கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் அதற்கு பின்பு நடந்த கலவரங்களைப் பற்றி விசாரிக்க குஜராத் மாநில அரசு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குல்பர்க் படுகொலை வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழு தனது குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது.  

ஜாகியா ஜஃப்ரி அளித்த புகாரில் முகாந்திரம் இருக்கிறதா என சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் என 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.

பிப்ரவரி 2012ல் சிறப்புப் புலனாய்வுக் குழு தாக்கல் செய்த அறிக்கையில் நரேந்திர மோடி குஜராத் கலவரத்தில் தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்திருந்தது.

கோத்ரா ரெயில் எரிப்பு தொடர்பான தடயவியல் அறிக்கை

கோத்ரா ரெயில் எரிப்பு தொடர்பான காவல்துறையின் தடயவியல் துறை அறிக்கை பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டது. அதாவது இரெயில் பெட்டியை வெளியே இருந்து யாரும் எரித்ததற்கான தடயம் இல்லை என்றும். இரெயில் பெட்டியின் உள்ளிருந்து தான் தீ பரவியுள்ளது என்றும் தடயவியல் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் கலவரம் தொடர்பான முக்கிய வாக்குமூலங்கள்

இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவில் குஜராத் மாநில முன்னாள் டிஐஜி சஞ்ஜீவ் பட் ஆஜராகி முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி முன்னுக்குபின் முரணான தகவல்களை வழங்கி காவல்துறையை தவறாக வழிநடத்தியதாக வாக்குமூலம் அளித்தார்.

குஜராத் கலவரத்தில் அப்போதைய முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு உள்ள தொடர்பை ஊடகங்களுக்கு இரகசியமாக வெளிப்படுத்திய குஜராத் மாநில முன்னாள் வருவாய்த் துறை அமைச்சர் ஹரேன் பாண்டே தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சில மாதங்களிலேயே கொல்லப்பட்டுள்ளார்.

குஜராத் கலவரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட நானாவதி-மேத்தா ஆணையத்தில் காவல்துறையின் ஏடிஜிபியாக இருந்த ஆர்.பி.சிறீகுமார் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். கலவரத்தின் போது குஜராத் காவல்துறை சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட அனுமதிக்கப்படவில்லை என அதில் தெரிவித்திருந்தார்.   

தீர்ப்பும் தண்டனையும்

ஜூன் 2, 2016 ஆம் ஆண்டு குஜராத் கலவர வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்றம் 24 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. 36 பேர் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

ஜாகியா ஜாஃப்ரியின் தொடர்ச்சியான சட்டப் போராட்டம்

குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடிக்கு தொடர்புள்ளது என ஜாகியா ஜாஃப்ரி மற்றும் நீதி-அமைதிக்கான குடிமக்கள் அமைப்பு தொடர்ச்சியாக பல சாட்சியங்களை திரட்டிக் கொடுத்தனர். அனைத்தியும் நீதிமன்றம் நிராகரித்து வந்தது.

கலவரத்திற்கும் மோடிக்கும் தொடர்பில்லை என உச்சநீதிமன்றம்

தற்போது நீதிமன்றம் குஜராத் கலவரத்தில் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடிக்கு தொடர்பில்லை என்றும் சஞ்சீவ் பட், ஹரேன் பாண்டே மற்றும் ஆர்.பி.சிறீகுமார் ஆகியோரின் கருத்துகள் அரசியல் உள்நோக்கம் கொண்டது என நீதிமன்றம் கூறியுள்ளது.

ஜாகியா ஜாஃப்ரி இந்தப் பிரச்சினையை கொதிநிலையில் வைத்திருப்பதற்காகவே இவ்வழக்கை நடத்துவதாக நீதிபதி கூறியது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

குல்பர்க் சொசைட்டி குடியிருப்பில் கொல்லப்பட்ட 69 உயிர்களுக்கும் குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கும் 20 ஆண்டுகள் கடந்து இன்றும் நீதி கிடைக்கவில்லை.

- ஜோஸ்