ஜெயலலிதா சிகிச்சை விவகாரம்...நெருக்கடிக்குள்ளாகும் விஜயபாஸ்கர் - ராதாகிருஷ்ணன்! 

ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையை கடந்த ஆகஸ்ட் 27 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தார்.

ஜெயலலிதா சிகிச்சை விவகாரம்...நெருக்கடிக்குள்ளாகும் விஜயபாஸ்கர் - ராதாகிருஷ்ணன்! 

தமிழ்நாடு அரசின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து சசிகலா தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் மூலம் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதாவுக்கு மருத்துவ சிகிச்சை

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளராக 25 ஆண்டுகளுக்கும் மேலாகவும், தமிழ்நாடு அரசின் முதலமைச்சராக 14 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர் ஜெயலலிதா. தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய இடம் வகித்த ஜெயலலிதா, கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 அன்று திடீரென நோய்வாய்ப்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவர் மூன்று மாதமாக தொடர் சிகிச்சையில் இருந்தும் உயிரிழந்தார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவிற்கு நிரிழிவு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவர் இறக்கும் வரை அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து பல வதந்திகள் பரவியது. 

ஆறுமுகசாமி ஆணையம்

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவரது மரணம் குறித்து விசாரிக்க 2017 செப்டம்பர் 25 அன்று ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆறுமுகசாமி ஆணையத்தில் சிறையில் இருந்தபடி சசிகலா தாக்கல் செய்த பிராமாணப் பத்திரங்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன. ஜெயலலிதாவுக்கு இருந்த தொற்றை குணப்படுத்த தீவிர சிகிச்சை நோய்ப் பிரிவில் நிபுணத்துவம் பெற்ற லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவை எப்படியாவது தமிழ்நாடு அழைத்து வாருங்கள் என தான் கூறியதையும் சசிகலா பதிவு செய்துள்ளார்.  

அறிக்கை தாக்கல்

ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கையை கடந்த ஆகஸ்ட் 27 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தார். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை இன்று நடந்த தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தின் போது வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் சசிகலா சிறையிலிருந்த போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

சசிகலா தகவல்

அந்த அறிக்கையில் சசிகலா கூறியிருப்பதாவது, தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இரண்டாவது முறையாக மருத்துவமனை வந்த போது ஜெயலலிதா அவரை பார்த்து கை உயர்த்தியதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்த அனைத்து விவரங்களும் முன்னாள் மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை ஆகிய மூவருக்கும் தெரியும் என கூறியுள்ளார்.

மேலும் அவர்கள் தான் மருத்துவமனை வரக்கூடிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த விவரங்களை தெரிவிப்பார்கள் எனவும் சசிகலா தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

- ஜெ