கட்சி பொறுப்பிலிருந்து விலகிய பாஜகவின் ஒரே ஒரு கவுன்சிலர். காரணம் என்ன?

கட்சி பொறுப்பிலிருந்து விலகிய பாஜகவின் ஒரே ஒரு கவுன்சிலர். காரணம் என்ன?

மதுரை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே ஒரு பாஜக கவுன்சிலர் பூமா. இவர் மதுரை பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத் தலைவராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் இவர் தனது மாவட்ட துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதம் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. அக்கடிதத்தில், மாவட்டத் தலைவரின் செயல்பாடுகளும் சுய நலப் போக்கும் கட்சியை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்து செல்லாமல் அழிவு பாதைக்கு அழைத்து செல்வதாக குறிப்பிட்டுள்ள அவர் மாவட்ட துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் மேலும் பதவியை ராஜினாமா செய்தாலும் கட்சியில் தொடர்ந்து செயல்பட இருப்பதாகவும் மாமன்ற உறுப்பினராகவும் தொடர்ந்து செயல்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மாவட்ட தலைவரை குற்றம் சுமத்தி மாவட்ட தலைவருக்கே எழுதப்பட்ட இந்த கடிதம் மதுரை பாஜக வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக மதுரை மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரனை தொடர்பு கொண்டு மாலைமுரசு செய்திகள் நிரூபர் பேசியபோது, "நாங்கள் அனைவருமே ஒன்றாகத்தான் 2 நாட்களுக்கு முன்னர் கோவையில் நடந்த செயற்குழு கூட்டத்திற்கு சென்று வந்தோம். அப்போதெல்லாம் அவர் எந்த குற்றச்சாட்டையும் வைக்கவில்லை. இப்போது ஏன் திடீரென்று இதுபோல பேசுகிறார் என தெரியவில்லை" எனக் கூறியுள்ளார். மேலும் பூமா அவரது கணவரின் வற்புறுத்தலின் காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறினார். அவரது கணவருக்கு ஒரு முக்கிய பொறுப்பை கட்சியில் அவர் எதிர்பார்த்தாகவும் ஆனால் அதற்கு அவர் தகுதியான நபர் இல்லை எனக் கருதியதாலும் எல்லாப் பொறுப்புகளையும் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே வழங்க முடியாது என்பதாலும் அப்பொறுப்பை அவருக்கு வழங்கவில்லை எனக்கூறிய அவர் அப்பொறுப்பு கிடைக்காததால் பூமா இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறினார். தொடர்ந்து, வேறு எங்கோ செல்வதற்கு அவர் தயாராகி இருப்பதாகவும் அதனால்தான் கட்சியில் உள்ள மேல்மட்ட கமிட்டிகளிடம் குற்றச்சாட்டை வைப்பதற்கு பதிலாக சமூக வலைதளங்களில் அவதூறு செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், கவுன்சிலர் பூமா தான் வேறுகட்சியில் இணைய இருப்பதாக மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன் பேசி வருவதை கண்டித்து மீண்டும் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் " உங்களுடைய தீய சிந்தனையும் பொய் பிரச்சாரமும் ஒரு நாளும் ஈடேராது" என தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com