மநீம கட்சியின் நிலைப்பாடு என்ன? காங்கிரஸ்க்கு ஆதரவா? எகிறும் எதிர்ப்பார்ப்பு!

மநீம கட்சியின் நிலைப்பாடு என்ன? காங்கிரஸ்க்கு ஆதரவா? எகிறும் எதிர்ப்பார்ப்பு!
Published on
Updated on
2 min read

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்பதில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் :

கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், கடந்த ஜனவரி 4 ஆம் தேதி  திருமகன் ஈவெரா காலமானார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ சீட் காலியாக உள்ள நிலையில், வருகிற பிரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் வரும் ஜனவரி 31 ஆம் தேதி துவங்க இருப்பதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

கட்சிகளின் முடிவு :

இந்நிலையில் தான் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் என அனைவரும் தங்களின் முடிவுகளை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில், திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு அதே தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு போட்டியாக, அதிமுக கூட்டணியில் கடந்த முறை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது அதிமுக களமிறங்க உள்ளதாக தமிழ்மாநில காங்கிரஸின் தலைவர் ஜிகே வாசன் அறிவித்தார்.

விரைவில் முடிவுகள் வெளியாகும் :

அதேசமயம், அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுவதாக இன்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, பாஜக தரப்பிலும், அமமுக தரப்பில், நாம் தமிழர் கட்சி தரப்பிலும் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் கூடிய விரைவில் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு என்ன?

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு என்ன? என்பது பற்றிய கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால், இந்த தேர்தல் மநீம போட்டியிடுவது குறித்து இதுவரையிலும் எந்தவிதமான தெளிவான செய்திகளும் வெளிவரவில்லை. கடந்த 2021 தேர்தலில் மக்கள் நீதி மய்யம் இந்த தொகுதியில் 4வது இடத்தை பிடித்தது. ஆனால், தற்போது இந்த கட்சி எந்த மாறியான நிலைப்பாட்டை கையில் எடுக்க போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

நடைப்பயணம் :

ஏனென்றால், மநீம கட்சி காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக செல்வதாக செய்திகள் பரவி வருகிறது. அதற்கு காரணம், கடந்த டிசம்பர் 24 ம் தேதி டெல்லியில் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல்காந்தியுடன் கமல்ஹாசனும், கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு நடைப்பயணம் மேற்கொண்டனர். பிறகு ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

ஜனவரி 23 ல் ஆலோசனை கூட்டம் :

இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து களம் இறங்குமா? இல்லாவிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வழங்குமா? இல்லாவிட்டால் தேர்லை புறக்கணிக்குமா? என்று மநீம கட்சி குறித்த எதிர்ப்பார்ப்பு எகிறுகிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தான், மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வருகிற ஜனவரி 23 ல் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக மநீம மீது ஏற்பட்டுள்ள எதிர்ப்பார்ப்புக்கு அன்றைய தினம் தெளிவாக விளக்கம் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com