என்ன தான் ஆச்சு மதிமுகவிற்கு?

என்ன தான் ஆச்சு மதிமுகவிற்கு?

மதிமுகவின் வளைகுடா நாட்டு பொறுப்பாளர் பசீர் அக்கட்சிலிருந்து நீக்கப்பட்டதற்கு சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாக பலர் பதிவிட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

1993ஆம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்து மதிமுக தொடங்கப்பட்ட போது திமுகவின் மாவட்ட செயலாளர்கள் பாதிக்கு மேல் மதிமுக சென்றனர். பல தேர்தல்களில் மாற்றம், திருப்பம், சறுக்கல் என இருந்த அக்கட்சி சில தேர்தல்களில் திருப்புமுனையையும் ஏற்படுத்தியுள்ளது. அக்கட்சியில் பலர் மீண்டும் திமுகவிற்கே சென்றும் உள்ளனர். முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், கம்பம் ராமகிருஷ்ணன், கண்ணப்பன், எல்.கணேசன் என ஒரு நீண்ட பட்டியலே உண்டு. ஆனாலும் தொடங்கப்பட்ட காலம் முதல் தற்போது வரை அக்கட்சியில் பயணிக்கும் ஏராளமானோர் உண்டு. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலும் சரி, 2021 சட்டமன்ற தேர்தலிலும் மதிமுகவின் சின்னமான பம்பரத்தில் நிற்கவில்லை மாறாக உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டது. தற்போது அக்கட்சியில் ஒரு எம்.பி(ஈரோடு), 4 எம்.எல்.ஏக்கள்(சாத்தூர், வாசுதேவநல்லூர், மதுரை தெற்கு, அரியலூர்) உள்ளனர். தேர்தலுக்கு பிறகு மதிமுக திமுகவில் இணைக்கப்படும் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்த நிலையில் மதிமுக தலைமை கழக செயலாளராக துரை வைகோ தேர்வானார்  அப்போதும் சில எதிர்ப்புகள் கிளம்பியது. விருதுநகர், சிவகங்கை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வைகோவின் செயல்பாடுகள் சற்று குறைந்த நிலையில் அவரது மகனின் செயல்பாடுகள் தற்போது கட்சியினர் மத்தியில் பின்னடைவையே தருகிறது எனலாம்.

தஞ்சாவூர் பகுதியை சேர்ந்தவரான வல்லம் பசீர் நீண்ட காலமாக மதிமுகவின் தீவிர விசுவாசி. தற்போது மதிமுகவின் வளைகுடா நாடுகளின் அமைப்பாளர் பதவியில் உள்ளார். அமீரகத்தில் பணியாற்றி வந்த தமிழ்நாட்டை சேர்ந்த சேதுராம் என்பவர் திடீரென மரணமடைந்த நிலையில் அக்குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பசீர் தவறான தகவல்களை வெளியிட்டதாக  அக்கட்சிக்குள்ளே சிலர் கூறியதாக கூறப்படுகிறது. மேலும் மறைந்த தொழிலாளி குடும்பத்திற்கு இழப்பீடு கிடைக்க வைகோதான் முழு காரணம் என பசீர் தெரிவித்துள்ளார். ஆனால் ஒரு சாதி அமைப்புதான் முக்கிய காரணம் என்று மதிமுகவில் உள்ள முக்கிய பிரமுகர்கள் பேசியதற்கு கடும்கண்டனம் தெரிவித்துள்ளார் பசீர். பூதாகரமாக வெடித்த இவ்விவகாரத்தில் தான் பசீர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக மதிமுக தரப்பில் கூறப்படுகிறது.  மேலும் சமூக வலைதளமான ட்விட்டர், பேஸ்புக்கில் மதிமுக மட்டுமல்ல மற்ற கட்சியினரும் பஷீர் நீக்கப்பட்டது குறித்து வருத்தம்-கண்டன பதிவுகளை இட்டு வருகின்றனர்.

இது குறித்து பசீர் “மரண தண்டனை விதிக்கப்பட்டவனுக்கு கூட இறுதி கருத்தை சொல்வதற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டம் இடம் வழங்கியுள்ளது. ஆனால், இப்பிரச்சனையில் என் கருத்தை அறியாமலே இந்த முடிவு ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்டுள்ளது ,  நான் தவறே செய்திருந்தாலும் என்னிடம் விளக்கம் கோராமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதால் என் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டுகள் (அவதூறுகள்) அப்படியே நிலைபெறும் சூழல் உருவாகியிருக்கிறது , அதனால் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பொதுவெளியில் விளக்கமளித்திட முடிவு செய்துள்ளேன் என்று முகநூலில் பதிவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com