

தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்து விட்டதால், தற்போது தமிழகத்தில் காலியாக இருக்கும் பாஜக தலைமையிடத்தை நிரப்ப போவது யார் என்ற கேள்வி மக்களிடமும், கட்சி நிர்வாகிகளிடம் எழுந்துள்ளது.
தமிழிசை சௌந்தராஜன் தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் பாஜக தலைவராக யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது. தேசிய செயலாளராக இருந்த ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன் உட்பட பல சீனியர்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பிடித்தது. ஆனால் தலித் சமூகத்தை சேர்ந்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராக இருந்த, எல்.முருகன் தமிழக பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தனது தீவிர முயற்சியால் வேல்யாத்திரை மூலம் மக்கள் மத்தியில் தன்னை நிலை நிறுத்தினார் எல்.முருகன். பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி முருகனின் 6 படை வீடுகளுக்கும் சென்று வேல் யாத்திரையை வெற்றிகரமாக முடித்ததோடு மட்டுமல்லாது பாஜக தலைமையிடமும் நற்பெயரை பெற்றார். தொடர்ந்து களப்பணியாற்றி, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 20 தொகுதிகளில் போட்டியிட்டது பாஜக. இருப்பினும் 4 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர்.
திருப்பூர மாவட்டம் தாராபுரம் தனி தொகுதியில் போட்டியிட்ட எல்.முருகன் ஆயிரத்து சொச்சம் வாக்குகளில் தோல்வியை தழுவினார். இருப்பினும் பல ஆண்டுகளுக்கு பிறகு 4 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபைக்குள் செல்வதற்கு எல்.முருகனின் கடின உழைப்பும் ஒரு காரணம். இதனால் மேலும் பாஜக தலைமையிடத்தில் நிலையான ஒரு இடத்தைப் பிடித்தார் எல்.முருகன்.
மத்திய அமைச்சரவையில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது என பிரதமர் மோடி அறிவித்ததில் இருந்து எல்.முருகன் அந்த அமைச்சரவையில் இடம் பிடிக்க டெல்லியில் முகாம் இட்டார் எல்.முருகன். இந்த விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையில் தமிழ்நாட்டில் இருந்து இரண்டு பெயரின் பெயர் அடிப்பட்டது. ஓ.பி.எஸ் மகனும் தேனி எம்.பியுமான ரவீந்திரநாத் குமார் மற்றும் எல்.முருகன். அதிமுகவில் இப்போது நடைபெறும் குழப்பத்திற்கு மத்தியில் ரவீந்திரநாத்தை மத்திய அமைச்சராக்க விரும்பவில்லை பாஜக மேலிடம். அதற்கு பதில் பாஜகவை சேர்ந்த நபரையே நியமித்து விடலாம் என எல்.முருகனுக்கு பதவி கொடுத்தது.
அதன்படி, மீன்வளம், கால்நடை, பால்வளம், தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சராக பதவியேற்றார் எல்.முருகன். இதனையடுத்து இனி தமிழ்நாட்டின் பாஜக தலைவர் பதவிக்கு யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கேள்வி மறுபடியும் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் வரவிருக்கும் இந்த நேரத்தில், அதிமுக-அமமுக-திமுக இடையே நடைபெற்று வரும் குழப்பங்களுக்கு மத்தில் களப்பணிகளை ஆற்றி, சம்பவங்களை கட்சிக்கு சாதகமாக்க திறமையான வியூகம் வகுப்பவர் யார் என்று பார்க்கும் போது, அண்ணாமலை, காயத்ரி ரகுராம் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோரின் பெயர்கள் மீண்டும் பட்டியலில் உள்ளனர்.
அண்ணாமலை பொறுத்தமட்டில், கர்நாடகா காவல்துறையில் பணியாற்றி, வேலையை ராஜினாமா செய்து தமிழகம் திரும்பி பாஜகவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்தவர். மக்களிடம் முகம் தெரிந்தவர். மேலும் காவல்துறையில் பணியாற்றிய அனுபவமும், படிப்பும் இருப்பதால் தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவராக அண்ணாமலை ஐபிஎஸ் தேர்ந்தெடுக்கப்படுவார் என பல அரசியல் விமசகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அடுத்ததாக லிஸ்ட்டில் இருப்பது நயினார் நாகேந்திரன். கட்சியில் சீனியராக இருப்பவர். அவரிடம் உள்ள ஆளுமையும், திறமையும் அண்ணாமலைக்கு இல்லை என அவரது ஆதரவாளர்கள் கொடிதூக்கி வருகின்றனர். வரப்போகும் உள்ளாட்சி தேர்தலுக்குள், அதிமுக-அமமுக இடையே நடைபெறும் குழப்பத்தில் உள்ளே புகுந்து அதிருப்தியாளர்களை பாஜக பக்கம் இழுக்கும் அசைன்மெண்ட் நயினார் நாகேந்திரனுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் நின்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் மட்டுமல்லாது அமைச்சராகவும் இருந்தவர். தொடர்ந்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் நின்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர்.
இறுதியாக லிஸ்ட்டில் இடம் பிடிப்பது காயத்ரி ரகுராம். 2014-ம் ஆண்டில் இருந்து பாஜகவில் பயணம் செய்பவர். 2015 இல், காயத்ரி தமிழ்நாட்டில் கலைகளுக்கான பாரதிய ஜனதா கட்சியின் செயலாளராக நியமிக்கப்பட்டார். அந்த வகையில் பாஜவின் கொள்கைகளையும், பிரதமர் மோடியின் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், மோடியின் திட்டங்களை எதிர்ப்பவர்களுக்கு பதிலடி கொடுப்பதிலும் இவரை மிஞ்ச யாரும் இல்லை என்ற அளவு கட்சி மீது பற்றுக் கொண்டுள்ளவர். தமிழிசை சௌந்தராஜனுக்கு பிறகு தமிழக பாஜக தலைவர் பதவிக்கு ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் உள்ளது. அந்த வரிசையில் நடிகை கௌதமி, குஷ்பு ஆகியோரும் உள்ளனர்.
கௌதமி நேரடியாக பாஜகவில் இணைந்தவர். ஒருவேளை கௌதமிக்கு பதவி வழங்கப்பட்டால், கமல்ஹாசனை ஆஃப் செய்து விடலாம் என்ற எண்ணமும் பாஜக தலைமைக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலில் நூழிலையில் கமல்ஹாசனை பாஜவின் வானதி சீனிவாசன் ஜெயித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல குஷ்பூ பாஜகவின் பரம எதிரியான காங்கிரஸ் கட்சியிலிருந்து வந்தவர். அவருக்கு பதவி வழங்கப்பட்டால் சில வியூகங்களை தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும் எனவும் பாஜக தலைமை எண்ணலாம்.. ஆக போட்டி பலமாக இருப்பதால், தமிழக பாஜக தலைமை யார் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.
இவர்களில் யாராவது ஒருவரை பாஜக தலைமை தேர்ந்தெடுக்குமா? அல்லது எல்.முருகன் போன்று எதிர்பார்க்காத வகையில் வேறு யாரையாவது தலைவர் ஆக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..