ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு பிளவுபட்ட அதிமுக:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு, அதிமுக சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்று பயணித்தது. சசிகலா பெங்களூர் பரப்பன்ன அக்ரஹாரா சிறைக்கு சென்ற பின்னர் அதிமுகாவில் அடுத்தடுத்த பல திருப்பங்கள் நடைபெற்றன. ஒரு குடும்பத்தின் பிடியில் அதிமுக செல்ல கூடாது எனக்கூறி தர்ம யுத்தத்தை நடத்தினார் ஓ.பி.எஸ். இதனால் அதிமுக இரண்டாக பிளவுபடும் சூழல் ஏற்பட்டது.
இந்த சூழலில் அதிமுகவின் துணைபொதுச்செயலாளராக டிடிவிதினகரனை நியமித்துவிட்டு பெங்களூர் பரப்பன்ன அக்ரஹாரா சிறைக்கு சென்றார் சசிகலா. அப்போது தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதிமுக கட்சியின் சின்னம் முடக்கப்பட்டதால் குக்கர் சின்னத்தில் நின்று தேர்தலை சந்தித்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார் டிடிவி தினகரன். இதன்பின்னர் அதிமுகவில் நடந்த அதிரடி திருப்பங்களால் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் ஓரணியிலும், டிடிவிதினகரன் எதிர் துருவமாகவும் அரசியல் செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டது.
தனித்துவிடப்பட்ட தினகரன்:
இதனிடையே அவ்வப்போது அதிமுகவை கைப்பற்றுவதற்காகவே அமமுக தொடங்கப்பட்டதாக டிடிவிதினகரன் கூறிவந்தார். அதிமுகவில் சிலீப்பர் செல்கள் இருப்பதாகவும் அவர்கள் எப்போது வேண்டுமென்றாலும் தங்கள் அணிக்கு வாருவார்கள் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக அப்படி ஒரு நிலை தமிழ்நாடு அரசியலில் ஏற்படவில்லை.
ஒற்றை தலைமை விவகாரத்தில் அவமானப்படுத்தப்பட்ட ஓ.பி.எஸ்:
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதிலும் டிடிவிதினகரன் கருத்துக்கள் எதையும் பெரும்பாலும் கூறாமல் தவிர்த்து வந்தார். ஓ.பி.எஸ் அரசியலில் பயணிக்கவும் அவருக்கு அரசியலில் முகவரியை ஏற்படுத்தி கொடுத்தவரும் தினகரன் ஆகவே பார்க்கப்படுகிறார். அப்படிபட்ட ஓ.பி.எஸ் அதிமுகவின் செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் அவமானப்படுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. அப்பொழுது கூட தினகரன் பெரிய அளவில் கருத்துக்களை கூறவில்லை.
மீண்டும் அதிமுகவில் அமமுக இணைவதாக பேச்சு:
இந்த பின்னணியில் தான் அமமுகவின் நிர்வாகிகள் கூட்டம் ராயப்பேட்டையில் நடைபெற்றது. அதில் அதிமுகவின் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்பொழுது இ.பி.எஸ் க்கு எதிராக அமமுக நிர்வாகிகள் துண்டு பிரசுரங்களை வழங்கி எதிர்ப்பை பதிவு செய்தனர். அப்பொழுது அமமுகவையும் அதிமுகவையும் இணைப்பது குறித்து அமமுக நிர்வாகிகள் பேசியதாக் கூறப்படுகிறது. அதற்கு சிறிது நேரம் யோசித்த டிடிவிதினகரன் அதிமுகவில் அமமுகவை இணைப்பதில் சிக்கல் இல்லை. ஆனால் அமமுக அதிமுகவில் இணைந்தால் தனக்கு பதவி கிடைத்துவிடும் தன்னை நம்பி வந்த நிர்வாகிகளின் அரசியல் அடையாளம் கேள்வி குறியாகும் எனவே அதிமுக அமமுக இணைப்பை பற்றி தற்பொழுது எதுவும் பேசவேண்டாம் என முடிவுரை எழுதிவிட்டார்.
இருப்பினும் இ.பி.எஸ் க்கு எதிராக அமமுக நிர்வாகிகள் துண்டு பிரசுரம் விநியோகித்ததும் தனிகவனத்தை பெற்றுள்ளது. தனது நீண்ட நாள் கனவான அதிமுகவை கைப்பற்றுவதற்கு ஓ.பி.எஸ் உடன் இணைந்து செயல்படுவாரா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.