இணைந்து செயற்பட தயார்...ரணிலின் கருத்தை ஏற்பார்களா போராட்டக்காரர்கள்?

இணைந்து செயற்பட தயார்...ரணிலின் கருத்தை ஏற்பார்களா போராட்டக்காரர்கள்?

வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட தயார் என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி

ஈழத் தமிழர் மீதான இனப்படுகொலைக்காக ஆயுதங்கள் மற்றும் போர்த் தளவாடங்கள் வாங்கியதால் அந்நாட்டு பொருளாதாரம் பாதிப்படைந்தது. இலங்கையின் பொருளாதாரம் சீரழிந்ததால் அந்நாட்டு மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தினர்.

அதிபரான ரணில் விக்ரமசிங்க

இலங்கை அதிபருக்கு எதிரான போராட்டம் காலிமுகத் திடலில் நடைபெற்று வந்தது. கடந்த ஜூலை 9 ஆம் தேதி போராட்டக்காரர்களால் அதிபர் மாளிகை கைப்பற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிபர் அலுவலகம் உள்ளிட்ட சில முக்கிய அரசுக் கட்டடங்கள் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இலங்கை அதிபர், பிரதமர் உள்ளிட்டோர் பதவி விலக வேண்டும் இலங்கை அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.

போராட்டம் அழுத்தம் அதிகரிக்கவே பிரதமர் பதவியிலிருந்து விலகினார் மகிந்த ராஜபக்ச. இவரைத் தொடர்ந்து கோத்தபய ராஜபக்சவும் இலங்கையின் அதிபர் பதவியிலிருந்து விலகினார். அதன் பிறகு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் ரணில் விக்ரமசிங்கவை அதிபராகத் தேர்ந்தெடுத்தனர்.

போராட்டக்காரர்களுடன் சந்திப்பு

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே காலிமுகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தரப்பினருடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது, நாம் இப்போது பொருளாதாரப் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதை  சுட்டிக்காட்டிய அதிபர், அந்தப் பொருளாதாரப் போராட்டத்தின் வெற்றிக்கு போராட்டக் களத்தில் உள்ள அனைத்து இளைஞர், இளம் பெண்களையும் சகல வழிகளிலும் பங்கேற்கச் செய்ய தாம் எதிர்பார்ப்போடு உள்ளதாக தெரிவித்தார்.

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவை காலி முகத்திடல் போராட்டக்காரர்களின் பல்வேறு தரப்பினருக்கும் இடையில் ஆகஸ்ட் 5 அன்று அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலின்போதே ரணில் இவ்வாறு தெரிவித்தார்.

அனைத்து போராட்டக்காரர்களை உள்ளடக்கிய குழு

ஜனநாயக விரோத அரசியலையும் வன்முறையையும் தாம் எதிர்ப்பதாகவும், ஒடுக்குமுறைக்கு எதிராக செயற்படுபவர்கள், பல்கலைக்கழக செயற்பாட்டின் ஊடாக பகிடிவதையை(ரேகிங்) நிறுத்தி சிறந்த சமூக ஜனநாயகத்துக்காக முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இன்று நமது பல்கலைக்கழகக் கட்டமைப்பு சீர்குலைந்து இருப்பதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று பகிடிவதை ஆகும். வேலைநிறுத்தங்கள் எல்லா காலத்திலும் தொடர்ந்தன.

வேலைநிறுத்தங்கள் மூலம் ஒரு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்றும், பேச்சுவார்த்தை மூலம் வந்து கோரிக்கைகளை பெற்றுக்கொள்வதைப் போன்று, நாட்டுக்காக செய்ய வேண்டிய பணிகளை நிறைவேற்ற  வேண்டும்.  அனைத்து போராட்டக்காரர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் முதன்மை குழுவொன்றை உருவாக்குமாறு கூறிய அதிபர், அக்குழுவிற்கு அனைத்து மதங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் அவசியமானது எனவும் குறிப்பிட்டார்.

இளைஞர்களுக்கான மையம்

இளைஞர்களின் தேவைகளுக்கான ஒரு மையத்தை அரச ஒத்துழைப்புடன் செயற்படுத்துவதற்கு, கொழும்பு கோட்டை, மிதக்கும் சந்தை மற்றும் பல்வேறு  இடங்களை முன்மொழிய தான் விரும்புவதாகத் தெரிவித்த அவர், அது தொடர்பில் முறையான ஆலோசனைகளை பெரும்பான்மையான போராட்டக்காரர்களின் ஒப்புதலுடன் தயாரித்து கையளிக்குமாறும் தெரிவித்தார். அந்தச் மையத்தில், கல்விக்கான நூலகங்கள், அரசியல் கல்விக்கான வசதிகள், இசை, கலை, நாடகம் போன்ற இளைஞர்களின் திறன்கள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு மையமாக அது உருவாக்கப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

பொது மக்கள் சபைக்கான முன்மொழிவு

அவசரகால நிலையை முடிந்தவரை விரைவில் நீக்குவது நாட்டின் பொருளாதார மற்றும் சமூக நிலைத்தன்மைக்கு முக்கியமாக இருப்பதைப்போன்று, தற்போதுள்ள நிலைமைகள் காரணமாக நாட்டின் நிர்வாகத்திலும் அதன் தாக்கம் உள்ளது. மேலும், பொதுமக்கள் சபைகளை அமைப்பது தொடர்பாக ஏற்கனவே பல தரப்பினரிடமிருந்து முன்மொழிவுகள் தமக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அதிபர் ரணில் விக்ரமசிங்க, அடுத்த வாரம் இது குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சட்டவிரோத கைதுகள் நிறுத்தப்பட வேண்டும்

போராட்டக்காரர்களை பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்தவர்களின் கோரிக்கையானது, அமைதியான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை சட்ட விரோதமாகவோ அல்லது தன்னிச்சையாகவோ கைது செய்வதைத் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்பதாகும். தற்போது எந்த தவறும் செய்யாது போராட்டக் களத்தில் இருக்கின்ற போராட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்படுவதால் அங்கிருந்து வெளியே செல்ல பயப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இப்போராட்டத்தின் மிகவும் கடினமான பகுதி தற்போது ஆரம்பமாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ள போராட்டக்காரர்கள், நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் சிந்தனைகளிலும் புரட்சி ஏற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இளம் தலைமுறையினர் எல்லையற்ற அர்ப்பணிப்புடன் நாட்டிற்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தவே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்ததாகவும், அரசியலமைப்பு ரீதியில் சாதகமான பலனைப் பெறுவதே தமது எதிர்பார்ப்பு எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் சமூக சீர்திருத்தங்கள் உட்பட நாட்டை முறையான மற்றும் உறுதியான நிலைக்கு கொண்டு வர விரைவான சீர்திருத்த செயல்முறையை நிறுவ வேண்டும் என்றும் பரிந்துரைத்தனர்.

உலகின் கவனத்தை ஈர்த்த சிறீலங்கா

நாட்டின் முன்னேற்றம், கலந்துரையாடல் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் செய்துகொள்ளப்படுகின்ற இணக்கப்பாடுகளில் அடங்கியுள்ளதாகவும், அதற்காக ஜனநாயக நடவடிக்கைகள் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியிலும் மேற்கொள்ளப்படும் என நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தின் மூலம் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பல பெரிய வெற்றிகளை இளைஞர்கள் பெற்றுத் தந்தது தங்களது தலைமுறையின் தனிச்சிறப்பு என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். உலகம் முழுவதும் ஜனநாயகத்தைப் போற்றும் மக்களால் இந்தப் போராட்டம் மதிக்கப்படுதாகவும், அதன் காரணமாகவே சிறீலங்கா உலகின் கவனத்தைப் பெற்றதாகவும் அவர்கள் கூறினர்.