விஷ சாராய வழக்கு: சிறையில் உள்ள 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!

விஷ சாராய வழக்கு: சிறையில் உள்ள 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!

மரக்காணம் விஷ சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 11 பேரை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி நீதிமன்றம் அளித்துள்ளது.

மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த 13ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்தனர். அதனைத்தொடர்ந்து, பலரும் அதே போன்று  இறந்தும், தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டும் இருந்தனர். 

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தநிலையில், உயிரிழந்தவர்கள் குடித்த சாரயத்தில் மெத்தனால் என்னும் ரசாயனம் கலக்கப்பட்டது கண்டறியப்பட்டது. 

இந்த வழக்கு தீவிரமடையவே, பல இடங்களில் காவல் துறையினர் சாராயம் வியாபாரம் செய்யும் இடங்களிலும் போலி மதுபானக் கடைகளிலும் தீவிர சோதனைகள் மேற்கொண்டனர். இதில் ஏராளமான சாராயம் காய்ச்சும் கிடங்குகள் மற்றும், ஊரல்களும் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குகள் போடப்பட்டு வருகின்றது. மேலும் சாராயம் காய்ச்சுபவர்கள் கைது செய்யப்பட்டு கிடங்குகள் அழிக்கப்பட்டும் வருகின்றன.

இதில் மரக்காணம் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த மரக்காணம் காவல் துறையினர் 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

இந்த வழக்கு கடந்த 15ஆம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குற்றச்சாட்டுக்குள்ளான 12 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி அதிகாரிகள். கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 11 பேரையும் மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில்,  சிறையில் உள்ள 11 பேரையும் மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com