சென்னை விமான நிலையத்தில் ரூ.1.8 கோடி மதிப்பிலான தங்கப்பசை பறிமுதல்!

துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ 1.8 கோடி மதிப்புடைய 3.5 கிலோ தங்க பசை சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று காலை சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகள் விமானத்ததை விட்டு இறங்கி, குடியுரிமை சோதனை பகுதிக்கு சென்றனர். அதே விமானத்தில் வந்த  இலங்கை பயணி ஒருவர், டிரான்சிட் பயணியாக, மற்றொரு விமானத்தில் சென்னையில் இருந்து இலங்கை செல்வதற்காக டிரான்சிட் பயணிகள் அமர்ந்துள்ள பகுதியில் சென்று அமர்ந்தார்.

அப்போது சென்னை விமான நிலையத்தில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த  ஊழியர் ஒருவர் இலங்கை டிரான்சிட் பயணியிடம் சென்று நீண்ட நேரமாக பேசிக்கொண்டு இருந்தார்.

அதன் பிறகு அந்த தனியார் ஒப்பந்த ஊழியர் விமான நிலையத்தை விட்டு வெளியே செல்வதற்காக கேட் அருகே வந்தார். அந்த  கேட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், சந்தேகத்தில் அந்த ஒப்பந்த ஊழியரை சோதனை செய்தனர்.

அப்போது அவருடைய ஆடைக்குள் ஒரு பார்சல் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து வெளியில் எடுத்தனர். அந்தப் பார்சலினுள் தங்கப் பசை இருந்ததை அடுத்து அவரை வெளியில் விடாமல் நிறுத்தி வைத்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சரிவர பதில் அளிக்கவில்லை.

இதை அடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், அந்த ஒப்பந்த ஊழியரையும், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க பசையையும், விமான நிலைய, சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சுங்கத்துறை அதிகாரிகள் தங்கப் பசை பார்சலை ஆய்வு செய்தபோது, அதில் 3. 5 கிலோ தங்கப்பசை  இருந்தது. அதன் சர்வதேச  மதிப்பு ரூபாய் 1. 8 கோடி. இதை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள், விமான நிலைய ஒப்பந்த ஊழியரை பிடித்து மேலும் விசாரணை நடத்தினர்.

அப்போது துபாயிலிருந்து இன்று காலை, சென்னைக்கு  இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த இலங்கைப் பயணி, இந்த  தங்கப் பசையை துபாயிலிருந்து கடத்திக் கொண்டு வந்தார். அவரை இந்த ஒப்பந்த ஊழியர் சந்தித்து, அவரிடமிருந்து கடத்தல் தங்கத்தை சுங்கச் சோதனை இல்லாமல் வெளியில் கொண்டு செல்ல முயன்றார் என்று தெரியவந்தது. அதோடு இலங்கையில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த கடத்தல் பயணி, தற்போது இலங்கைக்கு தப்பிச் செல்வதற்காக, இலங்கை செல்லும்  விமானத்தில் ஏறி அமர்ந்து விட்டார் என்றும் தெரிய வந்தது.

இதை அடுத்து சுங்கத்துறையினரும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் விரைந்து செயல்பட்டனர். ஒப்பந்த ஊழியரை அழைத்துக் கொண்டு, இலங்கை செல்ல இருந்த விமானத்துக்குள் ஏறி, கடத்தல் பயணியை அடையாளம் கண்டு, அவரை விமானத்திலிருந்து முறைப்படி கீழே இறக்கினார்கள்.

இதையடுத்து துபாயில் இருந்து விமானத்தில் தங்கத்தை கடத்தி வந்த இலங்கை பயணி, மற்றும் கடத்தல் தங்கத்தை சுங்கச் சோதனை இல்லாமல் வெளியில் எடுத்துச் செல்ல முயன்ற, சென்னை விமான நிலைய தனியார் ஒப்பந்த ஊழியர் ஆகிய இருவரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு, இதைப்போல் ரூபாய் இரண்டு கோடி மதிப்புடைய, 4 கிலோ கடத்தல் தங்கத்தையும், விமான நிலைய ஒப்பந்த ஊழியர் உட்பட இருவரையும், சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அடுத்த இரு தினங்களில் மீண்டும் அதே போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது, சென்னை விமான நிலையத்தில்,பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிக்க: ரயில் ஏறும் போது தவறி விழுந்து கல்லூரி மாணவர் படுகாயம்!