கல்லூரி பேருந்தை திருடிய 4 பேர்.. சிசிடிவி-யில் சிக்கிய அவலம்...

நன்னிலம் அருகே தனியார் கல்லூரி பேருந்தை திருடிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்லூரி பேருந்தை திருடிய 4 பேர்.. சிசிடிவி-யில் சிக்கிய அவலம்...

நன்னிலம் அருகே தனியார் கல்லூரி பேருந்தை திருடிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் பாப்பாகோவில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரிக்கு சொந்தமான பேருந்து, திருவாரூர் மாவட்டம் மணவாளம்பேட்டை பகுதியில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பேருந்து திடீரென காணாமல் போனதை கண்டு, ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது, திருப்பூர் மாவட்டத்திற்கு பேருந்து கடத்தப்பட்டது தெரியவந்தது.

உடனடியாக ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, திருச்சிக்கும் கரூர்க்கும் இடையே திருப்பாயத்துறை சுங்கச்சாவடி அருகே பேருந்தை மடக்கி பிடித்தனர். ஆனால் பேருந்து திருடர்கள் தப்பி ஓடினர். இதனையடுத்து, தனிப்படை அமைத்து போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில், திருவாரூரை சேர்ந்த சத்திய ஸ்ரீராம், திருப்பூரை சேர்ந்த சிவகுமார், அஷ்ரப், சதீஷ்குமார் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருப்பூரை சேர்ந்த 3 பேரும் திருவாரூரில் உள்ள நண்பர் வீட்டிற்கு சென்றதாகவும், அதன் பின்னர் தனியார் கல்லூரி பேருந்தை திருடி, திருப்பூரை நோக்கி சென்றதாகவும் தெரியவந்துள்ளது.