குவாரி முறைகேடு வழக்கு; அமைச்சர் பொன்முடியிடம் 5 மணி நேரம் விசாரணை!

செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

கடந்த 2006லிருந்து 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதாகவும், இதனால் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் மீது 2012-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.

இந்தநிலையில், கடந்த ஜூலை 17-ஆம் தேதி பொன்முடி, கவுதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர்.

இந்த சோதனையின் முடிவில் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான ரூ.41.9 கோடி நிரந்தர வைப்பு தொகை, ரூ.13 லட்சம் வெளிநாட்டு கரன்சிகளை அமலாக்கத்துறை முடக்கியது.

செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியிருந்தது. நுங்கம்பாக்கத்தில் இந்தசூழலில் சென்னை உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் பொன்முடி இன்று ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com