வாகனச் சோதனை...!  துப்பாக்கியுடன் 5 பேர் கைது...!! 

வாகனச் சோதனை...!  துப்பாக்கியுடன் 5 பேர் கைது...!! 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் துப்பாக்கிகளுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை மாவட்டத்தில் மதுரை -ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்தன. டூவீலர்களில் செல்பவர்களை வழிமறித்து செல்போன், பணம், நகை உள்ளிட்டவற்றை இரண்டு பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்தது. 

இதுகுறித்து தொடர் புகார்கள் வந்ததையடுத்து போலீசார் இரவு நேரத்தில் அடிக்கடி வாகனச்சோதனை நடத்தி வந்தனர். நேற்று இரவு நான்கு வழிச்சாலையில் ராஜகம்பீரம் அருகே கால்பிரவு விலக்கு என்ற இடத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த சரக்கு வாகனத்தை வழிமறித்து சோதனையிட்டனர். வாகனத்தில் வந்தவர்களை விசாரித்த போது முன்னுக்கு பின் முரணமாக பேசியுள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சரக்கு வாகனத்தை சோதனையிட்ட போது அதில் இரண்டு ஒற்றைகுழல் துப்பாக்கிகள், 50 கிராம் எடை கொண்ட இரண்டு பாஸ்பரஸ் குண்டுகள், 50கிராம் எடை கொண்ட துப்பாக்கி ரவை துகள் உள்ளிட்டவைகள் இருந்துள்ளன.

போலீசார் அவற்றை பறிமுதல் செய்ததுடன் ஐந்து பேரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில் அவர்கள் திருச்சி மணப்பாறை அருகே செம்மேட்டுபட்டியைச் சேர்ந்த சுப்ரமணியன் (73) அவரது மகன் ரவிகுமார்(28), பிடாரிப்பட்டியைச் சேர்ந்த மோகன்ராஜ் (33), அஜித்குமார் (23) மேலூர் செவல்பட்டியைச் சேர்ந்த நடராசன்(36), என தெரியவந்தது.

சரக்கு வாகனத்தில் திருச்சியில் இருந்து மானாமதுரைக்கு துப்பாக்கியுடன் ஏன் வந்தனர்? ஒரு வேலை வன விலங்குகளை வேட்டையாட என்றால் வேட்டையாடுவதற்கு இவ்வளவு தூரம் வர வேண்டிய அவசியம் என்ன? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.