மூன்று மாதங்களில் 55,406 வழக்குகள்... எதற்காக தெரியுமா..?

தமிழகத்தில் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட மதுவிலக்கு சோதனையில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 55 ஆயிரத்து 406 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 55 ஆயிரத்து 613 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களில் 55,406 வழக்குகள்... எதற்காக தெரியுமா..?

தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய காவல் துறையினரும், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினரும் கள்ளச்சாராய உற்பத்தி, விற்பனை மற்றும் சட்ட விரோத மது விற்பனையை ஒழிக்கும் வகையில் தீவிரமாக கண்காணித்து மதுவிலக்கு சோதனை மேற்கொள்ள தமிழக காவல்துறை டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் கடந்த 3 மாதங்களில் மட்டும் சட்ட விரோத மது விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது 55 ஆயிரத்து 406 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதுவரை 55 ஆயிரத்து 613 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் தொடர் குற்றச் செயல்கள் புரிந்த 104 பேர் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 1.09 கோடி ரூபாய் மதிப்பிலான 2 லட்சத்து 73 ஆயிரத்து 256 லிட்டர் கள்ளச் சாராயம், 70.43 லட்சம் ரூபாய் மதிப்பிலான 4 லட்சத்து 69 ஆயிரத்து 559 லிட்டர் சாராய ஊறல்கள், 32.86 லட்சம் ரூபாய் மதிப்பிலான 32 ஆயிரத்து 866 லிட்டர் எரி சாராயம் மற்றும் சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 8.41 கோடி ரூபாய் மதிப்பிலான வெளி மாநில மற்றும் பல்வேறு வகையிலான அயல்நாட்டு மதுபானங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாகவும், இவற்றுக்காக பயன்படுத்தப்பட்ட 3 ஆயிரத்து 039 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் மதுவிலக்கு குற்றங்களுக்காக ஈடுபடுத்தப்பட்ட ஆயிரத்து 041 வாகனங்கள் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி பொது ஏலம் விடப்பட்டதாகவும், இந்த ஏலம் மூலம் 2 கோடியே 86 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் ஏலத்தொகையாக பெறப்பட்டு அரசுக் கணக்கில் செலுத்தப்பட்டதாகவும், இனிவரும் விழாக்காலங்களில் இதுபோன்ற மதுவிலக்கு குற்றங்களைத் தடுக்க தீவிர வாகனத் தணிக்கை மற்றும் மதுவிலக்கு சோதனையைத் தீவிரப்படுத்த உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.