விசாரணைக் கைதி மரணம் - 650 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!

விசாரணைக் கைதி மரணம் - 650 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!

சென்னை ICF காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழந்த சம்பவத்தில் ஆய்வாளர் உள்ளிட்ட மூன்று பேர் மீது சென்னை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு ICF காவல் நிலைய எல்லையில் உறவுக்கார பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தவரிடம், தன்னை காவலர் என அறிமுகப்படுத்திக்கொண்ட நித்தியராஜ் செல்ஃபோனை பறிக்க முயன்ற குற்றச்சாட்டில், ICF காவல் நிலைய ஓட்டுனர் நடராஜன் மற்றும் FRIENDS OF POLICE  ஆக இருந்த சுனில்குமார் ஆகிய இருவரும் நித்தியராஜை விசாரணைக்காக அழைத்து சென்றனர். 

நித்தியராஜிடம் கட்டாயப்படுத்தி ஒப்புதல் வாக்குமூலம் பெற்றதாகவும், கடுமையாக தாக்கியதாகவும் ஆய்வாளர் ராமலிங்கம் மீது புகார் எழுந்ததை அடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, உடலில் கடுமையான காயங்கள் உள்ளதாக கூறி ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க சிறை மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இதையும் படிக்க : சுதந்திர தினத்தை புறக்கணித்த கிராம மக்கள்... வீடுகளில் கறுப்பு கொடி கட்டி எதிர்ப்பு!

சிறைக்குச் சென்று திரும்பிய நித்யராஜ் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஏற்கனவே உயிரிழந்தவிட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து, வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 

இதுதொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இவ்வழக்கில் ICF காவல் நிலையத்தின் அப்போதைய ஆய்வாளர் ராமலிங்கம், காவலர்களான ஆனந்த் வினோத் சிங் மற்றும் விஜயகுமார் ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.சுதாகர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். 650 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் மூவர் பெயரும் இடம்பெற்றுள்ளதாகவும், நித்தியராஜின் கை, கால்களை கட்டி தொங்கவிட்டு, பிளாஸ்டிக் பைப் மற்றும் லத்தியால் தாக்கியதால் ஏற்பட்ட காயம் காரணமாகவே உயிரிழந்ததாகவும் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.