கவர்ன்மெண்ட் வேலை வாங்கி தருகிறோம்... நுனிநாக்கில் ஆங்கிலம் பேசி 4 கோடி மோசடி செய்த தம்பதி...

பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக ரூ. 4 கோடி மேல் மோசடி செய்த ஏமாற்றிய தம்பதி கைது.

கவர்ன்மெண்ட் வேலை வாங்கி தருகிறோம்... நுனிநாக்கில் ஆங்கிலம் பேசி 4 கோடி மோசடி செய்த தம்பதி...

சென்னை, வளசரவாக்கத்தைச் சேர்ந்த காந்தா என்பவரின் மகனுக்கு Airportல் Immigration ஆபிசர் வேலை வாங்கி தருவதாக கூறி ஆழ்வார் திருநகரில் Mass Manpower Consultancy என்ற நிறுவனம் நடத்திவரும் தம்பதிகளான சசிப்ரியா(43) அவரது கணவர் ரவிச்சந்திர பிரபு(51) மற்றும் இவர்களது மகளான அக்ஷதா ஆகியோர் கடந்த 2010ஆம் ஆண்டு ரூபாய் 20 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு வேலையும் வாங்கித் தராமல் பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

இதனால் காந்தா என்பவர் மத்திய குற்றப்பிரிவு -  வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில் கணவன் மனைவி மற்றும் அவர்களது மகள் ஆகிய மூன்று நபர்கள் மீதும் போலீசார் மோசடி மற்றும் நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். 

இந்த நிலையில் சசிப்ரியா மற்றும் அவரது கணவரான ரவிச்சந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த 2016 ம் ஆண்டிலிருந்து இருந்து சுமார் 60 நபர்களுக்கு மேல் கல்வித்துறையில் ஆசிரியர் பணி, என்.எல்.சி.யில் காண்டிராக்டர், இன்ஜினியர் வேலை. சுகாதாரத் துறையில் Nurse, நீதிமன்றங்களில் OA, JA, Airportல் Immigration வேலை, மின்சார துறையில் OA, JE, AE வேலை, அறநிலையத் துறையில் வேலை, என பல்வேறு அரசு துறைகளில் உயர் பதவிகள் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி வந்துள்ளனர் என்பது தெரியவந்தது. 

ஒவ்வொரு நபரிடமும் லட்சக்கணக்கில் ஏமாற்றி இதுவரை 4 கோடிக்கும் மேல் கணவன் மனைவி மற்றும் இவர்களது மகள் ஆகிய மூவரும் சேர்ந்து மோசடி செய்திருப்பது தெரியவந்தது. குறிப்பாக NLCயில் பொறியாளர் வேலைக்கு ரூ.16 லட்சம்,  நீதிமன்ற வேலைக்கு ரூ 40 லட்சம், விமான நிலைய அதிகாரி வேலைக்கு ரூ. 20 லட்சம், செவிலியர் பணிக்கு ரூ.8 லட்சம் என ஒவ்வொரு வேலைக்கும் குறிப்பிட்ட லட்சங்களை நிர்ணயித்து மோசடி செய்து வந்துள்ளனர் என்பது தெரிய வந்தது.

இந்த மோசடிக்கு மூளையாக இருந்து செயல்பட்டது பன்னிரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து நுனி நாக்கு ஆங்கிலம் பேசி வரும் சசி பிரியா என்பது தெரியவந்தது. இவர் தன்னை பட்டதாரியாகக் காட்டிகொண்டு அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தனக்கு பழக்கம் எனக் கூறி மோசடியில் ஈடுபட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. 

எம்எஸ்சி பட்டதாரியான அக்ஷதா தனது தாய் சசி பிரியாவுக்கு கணினி மற்றும் தொழில்நுட்பங்கள் சொல்லிக் கொடுத்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இந்த வழக்கில் சசி பிரியா அவரது கணவர் ரவிச்சந்திர பிரபு ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள இவர்களது மகளான அக்ஷதா தீவிரமாக தேடி வருகின்றனர். 

கைது செய்யப்பட்ட தம்பதிகளிடமிருந்து போலி அரசு கடிதங்கள், போலியான பணி நியமன ஆணைகள், 10 செல்போன்கள் மற்றும் 2 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பொதுமக்கள் யாரும், இதுபோன்ற போலியாக ஏமாற்றும் நபர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும் வேலைக்காக முயற்சி செய்பபவர்களிடம் அரசாங்கமோ அல்லது தனியார் நிறுவனங்களோ எவ்வித முறையிலும் பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வழங்கி வருவதில்லை எனவும், வேலைக்காக முயற்சி செய்பவர்கள் முன்பின் தெரியாத நபர்களிடம், வங்கியின் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாக பண பரிமாற்றம் செய்ய வேண்டாம் எனவும் சென்னை காவல்துறை அறிவுரை வழங்கியுள்ளது.