ஒரு தலை காதல் விவகாரம்...டிவி மெக்கானிக்  தலை துண்டித்து படுகொலை ...கோவில்பட்டி அருகே கொடூரம்....

கோவில்பட்டி அருகே ஒரு தலை காதல் விவகாரத்தில் டிவி மெக்கானிக்  தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு தலை காதல் விவகாரம்...டிவி மெக்கானிக்  தலை துண்டித்து படுகொலை ...கோவில்பட்டி அருகே கொடூரம்....

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள குமாரகிரிபுதூர் கிராமத்தினை சேர்ந்த சுப்புராஜ் என்பவரின் மகன் சூரிய ராகவன். இவர் எட்டயபுரத்தில் உள்ள உறவினருக்கு சொந்தமான டிவி பழுதுபார்க்கும் கடையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார்.. 

காலையில் வழக்கம் போல சூரிய ராகவன் கடையில் வேலை பார்த்து கொண்டு இருந்த போது, திடீரென கடைக்கு வந்த மர்ம நபர் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி, தான் கொண்டு வந்த கத்தியால் சூரிய ராகவன் தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிரச்சியில் உறைய வைத்துள்ளது.

முன்னதாக மிளகாய் பொடியை வீசி சூரிய ராகவனின்  தலையை துண்டித்து கையில் எடுத்து சென்ற அந்த கொடூரன், பல  மீட்டர் துரத்தில் தலையை வீசி சென்றதாக தெரிகிறது.

இது குறித்த தகவல் அறிந்த  எட்டயபுரம் போலீசார் விரைந்து சென்று சூரிய ராகவன் உடலை மீட்டு  தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப் பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட எஸ். பி. ஜெயக்குமார், சம்பவ இடத்தினை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

இதில் சூரிய ராகவனை கொலை செய்தது சோழபுரத்தை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் ஆனந்தராஜ் என்பது தெரியவந்தது. தாம் ஒரு தலையாக காதலித்த பெண்ணை சூரிய ராகவன் காதலித்து  மணம் முடித்ததால்  ஆத்திரத்தில் இருந்த ஆனந்தராஜ் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது காவல் துறை  நடத்திய விசாரணையில் அம்பலமாகியிருக்கிறது.

வெவ்வேறு  சமூகத்தை சேர்ந்த சூரிய ராகவன், மகாலெட்சுமி இருவரும் பெற்றோர்களின் எதிர்ப் பினையும் மீறி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில்  இந்த கொடூர சம்பவம் அரங்கேறி இருப்பதால் ஒரு தலைக்காதல் தான் காரணமா அல்லது ஆணவ கொலையா  என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  கொலை நடந்த 4 மணி நேரத்தில் போலீசார் குற்றவாளியை கைது செய்தது குறிப் பிடதக்கது.