குடிபோதையில் திருநங்கை காவலரிடம் தகாத முறையில் நடந்த காவலர்!!

சென்னையில் திருநங்கை காவலரிடம் குடிபோதையில் தகாத முறையில் நடந்துகொண்ட காவலர் உட்பட இருவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குடிபோதையில் திருநங்கை காவலரிடம் தகாத முறையில் நடந்த காவலர்!!

சென்னை அமைந்தகரை பி.பி தோட்டம் பகுதியில் காவல்துறையில் பணிபுரியும் திருநங்கை ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு திருநங்கைகளுக்கான ஒதுக்கீட்டில் இரண்டாம் நிலைக் காவலராக காவல்துறையில் சேர்ந்து தற்போது சென்னையில் சட்டம் ஒழுங்கு பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் வீட்டில் சமயல் எரிவாயு காலியாகவே உணவு வாங்குவதற்காக அமைந்தகரை அண்ணா ஆர்ச் அருகே பி.எஃச் சாலையில் உள்ள தனியார் உணவகத்திற்குச் சென்று உணவு வாங்க காத்திருந்துள்ளார்.

அப்போது அங்கு குடிபோதையில் வந்த 3 பேரில் இருவர் திருநங்கை போலிசிடம் கழிப்பறை எங்குள்ளது என கேட்டுள்ளனர். அதற்கு தெரியாது என அவர் கூற, ஏன் உனக்கு தெரியாது என வீண் தகராறு செய்ததோடு அவரின் உடலில் கைவைத்து தகாத முறையில் நடந்துள்ளனர். பின்னர் அதிர்ச்சியடைந்த அவர் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் எனக்கேட்டு தான் காவல்துறையில் பணிபுரிவதாக தெரிவித்துள்ளார்.

அதை பொருட்படுத்தாத இருவரும் நீ யாராக வேண்டுமானாலும் இரு எனக்கூறி அதில் ஒருவர் தானும் காவல்துறையில் அமைந்தகரை காவல் நிலையத்தில்தான் பணிபுரிகிறேன் எனவும் உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் எனவும் சவடாலாக பேசிவிட்டுச் சென்றுள்ளனர். இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக அமைந்தகரை காவல் நிலையத்தில் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்ட இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட திருநங்கை போலீஸ் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டத்தில் திருநங்கை காவலரிடம் தகாத முறையில் நடந்துகொண்ட காவலர் அமைந்தகரை காவல் நிலைய சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் கணேசன் என்பது தெரியவந்தது. இவர் மீது விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருடன் வந்த மற்றொரு நபர் யார் என்ற விபரங்களை அறியும் பொருட்டு அமைந்தகரை போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்