
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில், திருப்பதி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஆக்சிஸ் வங்கியின் ATM செயல்பட்டு வருகிறது. காவலாளி இல்லாமல் இயங்கி வரும் இந்த ஏ.டி.எம். மையத்தில் கடந்த 15-ம் தேதி எட்டரை லட்சம் ரூபாயை வங்கி நிர்வாகம் வைத்துள்ளது. இந்நிலையில், நள்ளிரவில் ஏ.டி.எம். மைத்திற்குள் நுழைந்த கொள்ளையர்கள், வெல்டிங் மிஷின் மூலம், ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து, அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இது தொடர்பான புகாரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்தியன் மற்றும் தடயவியல் நிபுணர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ஏ.டி.எம். கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.