பிரபல யூடியூப் சேனல் நடத்தும் நபருக்கு சொந்தமான படகில் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்...

நாகை மீனவன் என்ற பிரபல யூடியூப் சேனலை நடத்தும் நபருக்கு சொந்தமான படகில் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

பிரபல யூடியூப் சேனல் நடத்தும் நபருக்கு சொந்தமான படகில் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்...

நாகை துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு, படகு மூலம் கஞ்சா கடத்தவுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத் துறை உதவி ஆணையர் செந்தில்நாதன் தலைமையில் 15 பேர் கொண்ட குழு, நேற்றிரவு கடலோர பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டது.  கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை ஆகிய பகுதியில் சோதனை நடத்தி, நாகை துறைமுகம் நோக்கி வந்தபோது, சிலர் படகு ஒன்றில் மூட்டைகளை ஏற்றியுள்ளனர். 

மேலும் அதிகாரிகளை பார்த்ததும், அவர்கள் மூட்டைகள், 4 இருசக்கர வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டம் பிடித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த மூட்டைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவை அனைத்தும் கஞ்சா பொட்டலங்கள் என தெரியவந்தது. சுமார் 280 கிலோ எடையிலான கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதன் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் இருக்கலாம் என தெரிவிக்கின்றனர். 

இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு, பிரபல  ‘நாகை மீனவன்’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வருபவரின் குடும்பத்திற்கு சொந்தமான படகு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கஞ்சா பொட்டலங்களை இலங்கைக்கு கடத்த இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ள போலீசார், கஞ்சாவை கடத்த முயன்றது யார், இலங்கையில் யாருக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டது என்பது குறித்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் தற்போது நாகை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.