கொலை வழக்கில் 5 ஆண்டிற்கு பின் வடமாநிலத்தவர் கைது...!!!

கொலை வழக்கில் 5 ஆண்டிற்கு பின் வடமாநிலத்தவர் கைது...!!!

கடந்த 2018 ஆம் ஆண்டு கேளம்பாக்கம் அருகே நடைபெற்ற வடமாநில இளைஞர் கொலை வழக்கில் 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை விமானத்தில் பறந்து சென்று மும்பையில் போலீசார் கைது செய்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த தையூர் ஊராட்சியில் உள்ள பெரிய பிள்ளேரி பகுதியில் வசித்து வரும் 44-வயதான சசிகுமார் என்பவர் கடந்த 14.09.2018 ஆம் ஆண்டு அவரது வீட்டின் முதல் மாடியில் வாடகைக்கு வசித்து வந்த நபர் பீகார் மாநிலத்தை சேர்ந்த நபர் வசித்து வந்த அறையில் முகம் அழுகிய நிலையில் கொலை செய்யப்பட்டு இருப்பதாக கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பின்னர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டபோது கொலையான அனில் சௌத்திரி தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்து வந்ததும், அனில் சௌத்ரி இறந்து கிடந்த மூன்றாவது அறையில் வசித்து வந்த  பீகார் மாநிலத்தை சேர்ந்த ரகு மண்டல் மாயமாகி இருப்பது போலீசாருக்கு பலத்த சந்தேகத்தை எழுப்பியது. 

தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஒரே வீட்டில் முதல் மற்றும் மூன்றாவது அறையில் அருகில் அருகில் தங்கியிருந்த ரகு மண்டல் மற்றும் கொலையான அனில் சௌத்ரி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டிருந்த நிலையில் ரகு மண்டல் அனில் சவுத்ரியை கொலை செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  பீகார் மாநிலத்தை சேர்ந்த ரகு மண்டல் பட்டர்பிளை நிறுவனத்தில் பாலிஷ் போடும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கொலை நடைபெற்ற நாளில் இருந்து வேலைக்கு வரவில்லை என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

கொலையாளி யார் என்று தெரிந்தும் அவரை பிடிக்க நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்த கேளம்பாக்கம் போலீசார் கடந்த 5 வருடமாக இந்த கொலை வழக்கை கிடப்பில் போட்டுள்ளனர்.  செங்கல்பட்டு காவல் மாவட்டமாக இருந்தபோது கொலை நடந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.  இந்நிலையில் புதிதாக பிரிக்கப்பட்ட தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தின் பள்ளிக்கரணை துணை ஆணையர் ஜோஷ் தங்கையா தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  

கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து காவல்துறைக்கு தண்ணீர் காட்டி வந்த பீகாரை சேர்ந்த 54-வயதான ரகு மண்டலை தேடி அவரது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். கொலை செய்துவிட்டு அவரது சொந்த ஊரில் இருந்தால் காவல்துறை தன்னை தேடி வரும் என்பதால் மும்பையில் பதுங்கியிருந்த வேலை செய்து வந்தது தெரியவந்துள்ளது. பின்னர் பள்ளிக்கரணை துணை ஆணையர் ஜோஷ் தங்கையா தலைமையிலான தனிப்படையினர் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு சென்று தலைமறைவாக இருந்த  ரகு மண்டலை கைது செய்து கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். 

பின்னர் காவல் நிலையத்தில் வைத்து கைதான பீகாரை சேர்ந்த ரகு மண்டலிடம் விசாரணை மேற்கொண்டதில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது வந்ததாகவும், அதேபோல் கொலை நடைபெற்று அன்றும் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டபோது கைகலப்பாக மாறிய நிலையில் தனது அறையில் வைத்து அடித்து கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.  பின்னர் கைதான ரகு மண்டல மீது வழக்கு பதிவு செய்து திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

செங்கல்பட்டு மாவட்டத்தில்  கொலை செய்துவிட்டு மும்பையில் கடந்த 5 வருடமாக பதுங்கியிருந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பீகாரை சேர்ந்த நபரை 5 வருடங்களுக்கு பிறகு சாதுரியமாக விமானத்தில் பறந்து சென்று கைது செய்த துணை ஆணையர் தனிப்படையினருக்கு தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமுல்ராஜ் வெகுவாக பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

இதையும் படிக்க:  பல ஆண்களை திருமணம் செய்த பெண் சிறையிலடைப்பு...!!