பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒருவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்...

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்து சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி உள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒருவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், கடந்த 2019-ம் ஆண்டு கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சகோதரர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார்,  திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். 

பின்னர் இந்த வழக்கு விசாரணையானது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு பொள்ளாச்சியைச் சேர்ந்த அருளானந்தம், ஹேரேன் பால், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கு விசாரணையானது கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், தற்போது வரை 9 பெண்கள் தாமாக முன்வந்து புகார் அளித்துள்ளனர்.  

இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய  அருண் குமார் என்பவரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள், அவரை கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். சிபிஐ அதிகாரிகளின் இந்த நடவடிக்கையின் மூலம் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
.