ஆரணி : முன்னாள் ராணுவ வீரர் மரணம்...! கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை..!

ஆரணி : முன்னாள் ராணுவ வீரர் மரணம்...! கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மொழுகம்பூண்டி கிராமத்தை சேர்ந்த சின்னபையன் என்பவருடைய மகன் வெற்றிவேல் (42). இவர் கடந்த 2001 ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிந்தார். 2005 ஆம் ஆண்டு கண்ணமங்கலம் அடுத்த ஒண்ணுபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரேவதி என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியருக்கு பிரியதர்ஷினி, லிங்கேஸ்வரன், நீதர் உள்ளிட்ட ஒரு மகள் மற்றும் இரு மகன்கள் உள்ளனர். வெற்றிவேல் கடந்த 2021 ஆம் ஆண்டு ராணுவ பணியில் இருந்து ஓய்வு பெற்று வீடு திரும்பி உள்ளார். இவர்கள் ஆரணி வி.ஏ.கே நகர் தேனருவி பகுதியில் இடம் வாங்கி வீடு கட்டி குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஆறு மாதமாக ரேவதி, கணவனை பிரிந்து தனது தாய் வீடான ஒண்ணுபுரம் கிராமத்தில் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த நான்காம் தேதி வெற்றிவேல் வாகன விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுள்ளார். 

அந்த தகவல் அறிந்து வந்த மனைவி ரேவதி தனது குழந்தைகள் மற்றும் உறவினரின் மகன் விக்னேஸ்வரன் ஆகியோர் காயமடைந்த வெற்றிவேலை வேலூர் தனியார் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை அளித்து பின்னர் வீடு திரும்பி உள்ளனர். பின்னர் வீடு திரும்பிய ரேவதி பிள்ளைகளுடன் கணவரை அழைத்துக் கொண்டு ஆரணியில் உள்ள தனது வீட்டில் இரவு தங்கி உள்ளனர்.

இந்நிலையில் இன்று ரேவதி, அவரது உறவினர் மகனுக்கு தொடர்புகொண்டு, வெற்றிவேல் மயங்கி விழுந்துள்ளதாக கூறியுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த விக்னேஸ்வரன், வெற்றிவேல் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், அவரை ஆரணி மருத்துவமனை கொண்டு சென்று மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த தகவல் வெற்றிவேலின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்த அவரது தந்தை, தனது மகன் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி   ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் தனது மகன் ராணுவத்தில் பணிபுரிந்த போது மருமகள் ரேவதி வேறு சிலருடன் தொடர்பில் இருந்ததாகவும், அதனால் அடிக்கடி குடும்பத்திற்குள் தகராறு ஏற்பட்டதால் பிரிந்து வாழ்ந்தார்கள் எனவும் எனவே தான் தனது மகன் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார், இறந்த ராணுவ வீரரின் உடலை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து ராணுவ வீரர் வெற்றிவேலின் மனைவி ரேவதியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் முன்னாள் ராணுவ வீரர் வெற்றிவேலின் இறப்பில் ரேவதி முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து வந்துள்ளார்.

முதலில், தனது வீட்டில் திருடர்கள் மூவர் உள்ளே நுழைந்ததாகவும் அவர்களிடம் இருந்து எங்களை காப்பாற்ற கணவர் முயற்சித்த போது அடித்து விட்டு சென்று விட்டதால் கணவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் தனது கணவர் பெற்ற மக்களிடமே தவறாக நடக்க முற்பட்டார் அதனால், தானே அடித்து விட்டேன் என்றும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் முன்னாள் ராணுவ வீரரின் இறப்பு குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.