வீட்டு வாசலிலேயே தொழிதிபரை வெட்டி கொல்ல முயற்சி... தொழில் விரோதப் போட்டியால் விபரீதம்...

ஜோலார்பேட்டை அருகே தொழிலதிபரை அரிவாளால் வெட்ட கொலை முயற்சியில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டு வாசலிலேயே தொழிதிபரை  வெட்டி கொல்ல முயற்சி... தொழில் விரோதப் போட்டியால் விபரீதம்...

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி காலனி பகுதியை சேர்ந்தவர் பாலு மகன் அருள்மொழி. இவரும் சென்னை சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்த எஸ்.பி.ராமமூர்த்தி ஆகிய இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் கொசு மருந்து டெண்டர் எடுத்து தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி மற்றும் பொது சுகாதார துறைக்கு வியாபாரம் செய்து வந்தனர்.

இந்நிலையில் இரண்டு ஆண்டு டெண்டர் முடிந்த நிலையில் மீண்டும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புதிதாக ஒப்பந்தம் நடைபெற்றது. அப்போது அருள்மொழி என்பவருக்கு டெண்டர் கிடைக்கப்பெற்றது. இதனால் அருள் மொழிக்கும், ராமமூர்த்திக்கும் தொழில் ரீதியாக விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ராமமூர்த்தி என்பவர் அருள்மொழி என்பவரை தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று ஜோலார்பேட்டை பொன்னேரி காலனி பகுதிக்கு காரில் வந்த 4 பேர் அருள்மொழியை அவரின் வீட்டிற்கு எதிரிலேயே அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர். அப்போது அருள்மொழி கத்தி கூச்சலிடவே  அங்கிருந்த பொதுமக்கள் நான்கு பேரை பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் 4 பேரையும் கைது செய்து அவரிடமிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். 

மேலும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த சுந்தரம் என்பவரின் மகன் ஜீவா, சின்ன திருப்பதி பகுதியை சேர்ந்த ஜெய்பிரகாஷ் மகன் மதன்குமார், இவரது சகோதரர் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த பிரபாகரன் மற்றும் கார் டிரைவர் சேலம் நால்ரோடு பகுதியை சேர்ந்த பார்த்திபன் மகன் கௌதம் என்பதும் இவர்கள் தொழிலதிபரான ராமமூர்த்தி என்பவருக்கு உறவினர்கள் என்பதும் தொழில் போட்டியின் காரணமாக ராமமூர்த்தியின் தூண்டுதலின்பேரில் அருள்மொழி கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து திருப்பத்தூர் டிஎஸ்பி சாந்தலிங்கம் விசாரணை மேற்கொண்டு நான்கு பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கொலை தூண்டுதலுக்கு காரணமான ராமமூர்த்தி என்பவரை பிடிக்க ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் ஒரு தனி படையும், திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையில் ஒரு தனிப்படையும் என இரண்டு  தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் சென்னை விரைந்துள்ளனர். தொழில் ரீதியாக ஏற்பட்ட போட்டியில் ஒரு தொழிலதிபர் மற்றொரு தொழிலதிபரை தூண்டுதல் மூலமாக நான்கு பேர் அரிவாளால் வெட்ட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.