"தொகுதி மேம்பாட்டு நிதியில் எனக்கு வீடு கட்டிக்கொண்டேன்" உண்மையை ஒப்புக்கொண்ட பாஜக எம்.பி!

"தொகுதி மேம்பாட்டு நிதியில் எனக்கு வீடு கட்டிக்கொண்டேன்" உண்மையை ஒப்புக்கொண்ட பாஜக எம்.பி!

தனது தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு பகுதியை எடுத்து தனக்கு வீடுகட்டிக் கொண்டதாக தெலங்கானா பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், அலிதாபாத் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளவர் சோயன் பாபு ராவ். இவர் சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலானது. அந்த வீடியோவில், தனக்கு சொந்தமாக வீடு இல்லை என்பதால் தனக்கு மரியாதை கிடைக்கவில்லை எனவும், இதனால் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் ஒரு பகுதியை எடுத்து, அதன் மூலம் தனக்கு சொந்த வீடு கட்டிக்கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் தொகுதி மேம்பாட்டு நிதியின் ஒரு பகுதியை தனது மகளின் திருமணத்திற்கு பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, நிதியின் ஒரு பகுதியை மட்டுமே இவற்றிற்காக பயன்படுத்தியதாகவும் மொத்த நிதியையும் பயன்படுத்தவில்லை எனவும் பேசியுள்ள அவர் தான் செய்ததை ஒப்புக்கொள்வதாகவும் கூறியுள்ளார். மேலும் இதற்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் முழு நிதியையும் பயன்படுத்தியதாகவும் தான் அதில் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்தியதாகவும் பேசியுள்ளார். இவரது பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. பாஜக தன்னை ஊழலுக்கு எதிரான கட்சி என கூறிவரும் நிலையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தொகுதி மேம்பாட்டு நிதியை தனது சொந்த தேவைக்காக பயன்படுத்தியது பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்களை எழுப்பியுள்ளது. 

 இதையும் படிக்க:"தலை தூக்கும் தீண்டாமை" அமமுக செயற்குழு கண்டன தீர்மானம்!