'உபா' சட்டத்தில் கைது செய்யப்பட்ட பி.எப்.ஐ நிர்வாகிகளுக்கு ஜாமீன்!

சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை சேர்ந்த எட்டு நிர்வாகிகளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' இயக்கத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு தடை செய்தது. இதனையடுத்து, நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமையான தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தியது. 

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்ட நிலையில், சென்னை, மதுரை, கடலூரை சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பரக்கத்துல்லாஹ், மாநில பேச்சாளர் அகமது இட்ரிஸ், முகமது அபுதாகிர், காலித் முகமது, சையது இசாக், காஜா மொகைதீன்,  யாசர் அராபத், பயாஸ் அஹ்மத் ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

இதனை எதிர்த்து எட்டு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் T.மோகன், ஐ.அப்துல் பாஷித், வழக்கறிஞர் ஏ.ராஜா முகமது ஆகியோர் ஆஜராகி, சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லாத நிலையிலும், தாங்கள் எந்த குற்றமும் செய்யாத நிலையிலும், யூகத்தின் அடிப்படையிலும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வாதிட்டனர். கைது செய்யப்பட்டு ஓராண்டாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பதையும், உடல்நிலையையும் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

என்.ஐ.ஏ. தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் மற்றும் சிறப்பு வழக்கறிஞர் ஆர்.கார்த்திகேயன் ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டனர். விஷன் இந்தியா 2047 என்கிற அபாயகரமான நோக்கத்துடன் செயல்பட்டதாலேயே பி.எஃப்.ஐ. அமைப்பை மத்திய அரசு தடை செய்ததாகவும், மனுதாரர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், அது தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி, அவற்றை நீதிமன்றத்தின் பார்வைக்கு தாக்கல் செய்ததுடன், மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதனையடுத்து, நீதிபதிகள் எட்டு பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி, ஒரு லட்ச ரூபாய்க்கான இரு நபர் உத்தரவாதத்தை தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக்கொள்ளவும், அதன்பின்னர் சென்னையில் தங்கியிருந்து தினமும் காலை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும்,  பாஸ்போர்ட் இருந்தால் அதை ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com