பேருந்து மோதி ஒருவர் பலி; கோபத்தில் ஓட்டுநரை பேருந்தில் வைத்தே தர்ம அடி கொடுத்த பொது மக்கள்!

நெல்லை அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் கட்டிட தொழிலாளி பலி தனியார் பேருந்து ஓட்டுனருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு

பேருந்து மோதி ஒருவர் பலி; கோபத்தில் ஓட்டுநரை பேருந்தில் வைத்தே தர்ம அடி கொடுத்த பொது மக்கள்!

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் இருந்து சேரன்மகாதேவி வழியாக, திருநெல்வேலிக்கு இன்று மாலை தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தின் ஓட்டுநராக சக்திவேல் இருந்துள்ளார். இந்த பேருந்து முன்னீர் பள்ளம் அருகே உள்ள தருவை அருகே வந்தபோது, இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளது.

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி குமார் என்பவர், தனது வண்டியில் சாலையை கடக்கும் போது அவர் மீது பேருந்து மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கட்டிட தொழிலாளி குமார் உயிரிழந்தார். அப்போது அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து தனியார் பேருந்து ஓட்டுனர் சக்திவேலை பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட்டு தர்ம அடி கொடுத்தனர். இதன் பிறகு பேருந்து கண்ணாடிகளை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கட்டிட தொழிலாளி குமார் உடலை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தனியார் பேருந்து ஓட்டுனர் சக்திவேலை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து முன்னீர் பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது