காதலிக்க மறுத்த இளம்பெண் மீது ஆசிட் வீசிய கர்நாடக இளைஞர்.. சிக்கியது எப்படி?

காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீசி விட்டு சாமியார் வேடத்தில் திருவண்ணாமலை ஆசிரமத்தில் மறைந்திருந்த நபரை கர்நாடக காவல்துறையினர் கைது செய்தனர்.

காதலிக்க மறுத்த இளம்பெண் மீது ஆசிட் வீசிய கர்நாடக இளைஞர்.. சிக்கியது எப்படி?

கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில் உள்ள சுங்கத்கட்டே என்ற பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளம்பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த நாகேஷ் என்ற இளைஞர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.

அவரை காதலிக்க இளம்பெண் மறுத்த நிலையில் அலுவலகத்திற்கு சென்றும், அவரது வீட்டிற்கு சென்றும் அடிக்கடி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி இளம்பெண்ணை சந்தித்த நாகேஷ் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை இளம்பெண் மீது வீசிவிட்டு  அங்கிருந்து தப்பியோடினார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கர்நாடாக காவல்துறையினர் 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.

இதனிடையே நாகேஷ் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமண மகரிஷி ஆசிரமத்தில் சாமியார் போல வேடமணிந்து வாழ்ந்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற கர்நாடக காவல்துறையினர் நாகேஷை கைது செய்தனர்.

பெண் மீது ஆசிட் வீசிய குற்றவாளி ஒருவர் சாமியார் போல ஆசிரமத்தில் பதுங்கி இருந்த சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.