ஏரி ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை நின்ற காவலர்கள் மீது வழக்கு... நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

சேலம் அருகே ஏரியை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். பத்து ரூபாய் இயக்கத்தைச் சேர்ந்த அருண்குமார் அதே பகுதியில் உள்ள ஏரியின் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறார். 

இதனால் ஏரியை ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்களுக்கும், அருண்குமார் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆக்கிரமிப்புதாரர்கள் அருண்குமார் வீடு புகுந்து அவரது தாயை தாக்கியதாக கூறப்படுகிறது.  

இது தொடர்பான சிசிடிவி ஆதாரங்களை கருப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தமிழரசி, உதவி ஆய்வாளர் ராஜா மற்றும் சில போலீசார் சேர்ந்து அழித்ததாக கூறி அருண்குமார் சேலம் குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். 

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி வழக்கில் தொடர்புடைய நபர்கள் மற்றும் அவர்களுக்கு துணை புரிந்த காவல்துறை அதிகாரிகள் உள்பட அனைவர் மீதும் அதே காவல் நிலையத்தில் ஏழு நாட்களுக்குள் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கருப்பூர் காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளார். 

இதனிடையே கருப்பூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய ராஜா அண்மையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு தற்போது கிச்சிபாளையம் காவல் நிலையத்தில் பணி புரிந்து வருகிறார். 

சேலம் மாவட்ட காவல் துறையில் காவல் ஆய்வாளர் மீது அதே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்வது இதுவே முதல் முறை என்பதால் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.