ஓடையின் வழித்தடத்தையே மாற்றிய சிமெண்ட் ஃபேக்டரி...  மீட்டுத்தர பொதுமக்கள் கோரிக்கை...

கரூர் மாவட்டத்தில் சிமெண்ட் ஃபேக்டரி, குளத்திற்கு நீர் செல்லும் ஓடையின் வழித்தடத்தையே மாற்றிவிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓடையின் வழித்தடத்தையே மாற்றிய சிமெண்ட் ஃபேக்டரி...  மீட்டுத்தர பொதுமக்கள் கோரிக்கை...

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குஜிலியம்பாறை தாலுகாவில் உள்ள ஆலம்பாடி, கரிகாளி, மல்லபுரம், தோழி பட்டி,கோட்டாநத்தம் ஆகிய ஊராட்சி பகுதியில் உள்ள கிராமங்களுக்கு பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரதான கோவிலாக அருள்மிகு கரட்டுகோட்டை பெருமாள் கோவில் திகழ்ந்து வருகிறது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

இக்கோவிலில் சுற்றுப்பகுதியில் வாழும் கிராம மக்கள் தலைமுறை தலைமுறையாக கல்யாணம் மற்றும் சுபகாரியங்கள் இக்கோவிலில் நடத்தப்பட்டு வருவதாகவும் மேலும் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இக்கோவிலுக்கு வருகை புரிந்து வழிபட்டு வருவதாக கூறுகின்றனர்.

இந்நிலையில் பல நூறு ஆண்டுகளாக பொதுமக்கள் கோவிலுக்கு செல்லும் பாதையை கடந்த 10 ஆண்டுகளாக குஜிலியம்பாறை தாலுகாவில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான சிமெண்ட் உற்பத்தி செய்யும் தொழிற் சாலைக்கு சுண்ணாம்பு கற்கள் வெட்டி எடுப்பதற்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மாற்றுப்பாதையில் பொதுமக்கள் செல்வதற்கு வழிகள் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒரு முறை பாதைகளை மாற்றி அமைப்பதாக இப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.  மேலும் இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களுடன் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளதாகவும்  மக்கள் தெரிவிக்கின்றனர்.

கரூர் மாவட்டம் வெள்ளி அணை பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குளத்திற்கு பிரதான நீர்ப்பிடிப்பு  நடைபாதை ஓடையின் பிறப்பிடமான பகுதியில் தனியார் சிமெண்ட் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சுண்ணாம்பு கற்கள் எடுப்பதற்காக நடைபாதை ஓடையின் வழித்தடத்தை மாற்றி அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக தீவிரமாக செய்து வருவதாகவும் மேலும் நடைபாதை ஒடையின் மூலம் மழைநீர் சேர்வைகாரன்பட்டி குளம் அரண்மனை குளம் வெள்ளபாறை குளம் நிரம்பி பின்பு வெள்ளி அணை பகுதியில் உள்ள பெரிய குளத்திற்கு செல்கிறது.

பருவமழை தொடங்குவதற்கு ஒரு சில நாட்கள் உள்ள நிலையில் இவ்வாறு ஓடையை ஆக்கரமிப்பு செய்வது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்துவதாக இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

எனவே உடனடியாக கோவிலுக்கு செல்லும் பிரதான சாலையையும் மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கும் நீர்பிடிப்பு நடைபாதை ஓடையின் வழித்தடத்தை மீட்டு தர வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் வைக்கின்றனர்.