செந்தில் பாலாஜிக்கு எதிரான கோவாரண்டோ வழக்கு; தமிழக அரசு வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவு!

செந்தில் பாலாஜிக்கு எதிரான கோவாரண்டோ வழக்கு; தமிழக அரசு வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவு!
Published on
Updated on
2 min read

செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதற்கு எதிரான வழக்கில் எழுத்துப்பூர்வ வாதங்களை தமிழக அரசு தாக்கல் செய்யும்படி தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சட்ட விரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவரது துறைகளை பிற அமைச்சர்களுக்கு மாற்றியமைத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதி இருந்தார். அக்கடிதத்தில்  அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இதற்கு ஆளுநர் மற்றும் எதர்க்கட்சியினர் இடையே எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில் செந்தில் பாலாஜி  அமைச்சராக  பதவி வகிக்க தடைவிதிக்க கோரி முன்னாள் எம்பி ஜெயவர்தன் சார்பில் அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தாக்கல் செய்த கோவாரண்டோ மனுவை சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யதார். இதனை விசாரித்த உயர் நீதி மன்றம் எழுத்துப்பூர்வ வாதங்களை தமிழக அரசு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளது. 

பின்னர் இதுத் தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை செய்தியாளர்களை சந்திப்பில் கூறியதாவது, "செந்தில் பாலாஜி எந்த அடிப்படையில் அமைச்சராக பதவி வகிக்கிறார் என விளக்கம் கேட்டு அவர் பதவி வகிக்க தடைவிதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிற்கு தமிழக அரசின் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் பதிலளித்தார். ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எந்த தடையும் கிடையாது என்று பல தீர்ப்புகளை மேற்கோள்காட்டி அவர் வாதிட்டார். அவர் வாதிட்டது தவறு ஏனென்றால் இந்த வழக்கின் பிரதிவாதியாக தமிழக அரசும் ஆளுநரும் இருக்கிறார்கள் ஆளுநர் ஏற்கனவே அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கக்கூடாது என தெரிவித்துவிட்டார். ஆனால் முதலமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சர் ஆக நீடிப்பார் என்று அறிக்கை விடுத்தார். ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பது வழக்கல்ல. செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரக்கூடாது என்பது தான் வழக்கு.  சிறையில் இருக்கக்கூடிய துறை இல்லாத அமைச்சருக்கு ஏன் மக்களின் வரிப்பணம் செலவழிக்கப்பட வேண்டும் என்று கேள்வி எழுப்பினோம். அதற்கு சண்முகசுந்தரம் செந்தில் பாலாஜி சட்டமன்ற உறுப்பினர்களையும் விட குறைவாக ஊதியம் பெறுகிறார் என்ற வாதத்தை முன் வைத்தார். சட்டம் 164(5) ல் அமைச்சரை பற்றி என்ன கூறுகிறது என்றால் அமைச்சர் பதவிக்கு என்று சில சலுகைகள் உள்ளன. அந்த சலுகைகள் அதிகமான பொருட்செலவில் அளிக்கப்படுகின்றன இது தவறு என எடுத்துரைத்தோம். அட்வகேட் ஜெனரல் மூன்று கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. சிறையில் இருக்கும் ஒருவர் அமைச்சராக நீடிக்கலாமா?  மக்களினுடைய வரிப்பணம் இவ்வாறு வீணாக செலவழிக்கப்படலாமா ? இலாகா இல்லாத ஒருவர் அமைச்சர் பதவியில் நீடிக்கலாமா?  என்ற கேள்விகளுக்கு அட்வகேட் ஜெனரலிடம்  பதில் இல்லை. நாங்களும் பல்வேறு தீர்ப்புகளை மேற்கோள்காட்டினோம்.

ராமசந்திரன்  vs எம். ஜி ராமசந்திரன் என்றொரு வழக்கு இருக்கிறது. அந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கூறியது என்னவென்றால் ஆளுநர் தனக்கு விருப்பம் இல்லை என்று கூறும் வரை ஒருவர் அமைச்சராக பணியாற்றலாம். அதேபோல் இந்த வழக்கில் ஆளுநர், இலாகா இல்லாத ஒருவர் அமைச்சராக நீடிக்க கூடாது என்று கூறி இருக்கிறார் என்பதை நாங்கள் சுட்டி காட்டினோம். ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றொரு வாதம் இருக்கட்டும் ஆனால் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. எனவே நீதிமன்றங்கள் இதில் தலையிட வேண்டும். மனோஜ் நெருலா என்றொரு வழக்கு 2014 ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. அத்தீர்ப்பில் 149 வது பத்தியில் ஒரு நல்ல அமைச்சரை நியமிக்க வேண்டிய பொறுப்பு முதலமைச்சருக்கும் பிரதமருக்கும் உண்டு என அத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. நல்ல அரசாங்கம் என்பது நல்ல மனிதர்களின் கையில் இருக்கிறது என்று அத்தீர்ப்பு துவங்குகிறது. அத்தீர்ப்பின் 152 வது பக்கத்தில் நீதிமன்றம் இதில் தலையிட முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இது போன்ற வழக்குகளில் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பினாலே தார்மீக ரீதியாக ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால் செய்யவில்லை அதன் காரணமாகத்தான் எழுத்துப்பூர்வமாக வாதங்களை தமிழக அரசு தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் செவ்வாய் கிழமைக்குள் அரசு தாக்கல் செய்ய வேண்டும். தமிழக அரசு முதியோர் பென்ஷன் தொடர்பாக சட்டங்களை வகுத்துள்ளதாக நாம் செய்தித்தாள்களில் பார்க்கிறோம். அதற்கு அனைத்து அமைச்சர்களும் கையெழுத்து இடவேண்டும் ஆனால் கையெழுத்திட முடியாத சூழலில் அமைச்சர் செந்தில் பாலாஜி இருக்கிறார்.ஆகவே அந்த சட்டம் செல்லுமா என்ற கேள்வியையும் நாங்கள் உங்கள் முன் வைக்கிறோம்" என தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com