கோவை நீதிமன்ற வளாக கொலை சம்பவம்; 5 பேர் கைது

கோவை நீதிமன்ற வளாக கொலை சம்பவம்; 5 பேர் கைது

கோவை நீதிமன்ற வளாகம் அருகே நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த கோகுல் என்ற சொண்டி கோகுல் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் கோகுல் கோவை 3ஆவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் கையெழுத்திட  நண்பர் மனோஜ் என்பவருடன் வந்தபோது அங்கே வந்த ஒரு கும்பல் இருவரையும் திடீரென்று வழிமறித்து ஆயுதங்களால் தாக்கியது. இதில் கோகுல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் காவல்துறையினர் 5 தனிப்படை அமைத்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படை போலீசார் கோத்தகிரி அருகே காத்தப்பட்டி பகுதியில் இருந்த 5 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

அதில் ஜோஸ்வா, கவுதம் ஆகிய இருவரும் காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதாக கூறப்படும் நிலையில் அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் இருவருக்கும் காலில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.