குருவிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அளித்த மோசடி வாலிபர் கைது...

சென்னை மண்ணடி தம்பு செட்டி தெருவில் மருத்துவ பரிசோதனை மையம் நடத்தி வருபவர் ஹாரிஸ் பர்வேஸ்(30). இவரது மையத்தில் கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது.

குருவிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அளித்த மோசடி வாலிபர் கைது...

இந்நிலையில் பர்வேஸ் நடத்தி வரும் பரிசோதனை மையத்தின் பெயரில் போலியாக கொரோனா சான்றிதழ் வழங்கப்படுவதாக பர்வேசுக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக வாட்ஸ் அப்பிலும் வரக்கூடிய விளம்பரத்தையும் பர்வேஸ் பார்த்துள்ளர். அந்த விளம்பரத்தில் விமான பயணிகளுக்கு 500 ரூபாய் கட்டணத்தில் உடனடியாக கொரோனா பரிசோதனை சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.

இந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணுக்கு பர்வேஸ் வாட்ஸ் ஆப் செய்து 500 ரூபாய் பணத்தை கூகுள்பே மூலமாக அனுப்பியவுடன் உடனே கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பர்வேசின் எண்ணுக்கு வந்தது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பர்வேஸ் உடனடியாக பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விளம்பரத்தில் குறிப்பிட்ட எண்ணை வைத்து இந்த மோசடியில் ஈடுபட்ட திருவல்லிக்கேணியை சேர்ந்த இன்பர்கான்(29) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தனது நண்பர் உதவியுடன் கடந்த 6 மாதங்களாக மோசடி வேலையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் இன்பர்கான் தங்கம் உள்ளிட்ட வெளி நாட்டிற்கு கடத்தும் குருவியாகவும் செயல்படுபவர் என கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் கடத்தல் குருவிகளாக விமானம் மூலம் வெளிநாடு செல்லும் நபர்களை குறிவைத்து கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அளித்து வந்தது தெரியவந்தது. குறிப்பாக கடந்த 6 மாதத்தில் 500 க்கும் மேற்பட்ட குருவிகளிடம் 500 ரூபாய் பெற்று கொண்டு அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வழங்கியது தெரியவந்தது. மோசடி செய்து சம்பாதித்த பணத்தில் உல்லாசமாக இருந்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து கைதான இன்பர்கானை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்து வரக்கூடிய இன்பர்கானின் நண்பரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.