சுங்கத்துறை அதிகாரி, அவரது மனைவி மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு  

சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரி மற்றும் அவரது மனைவி மீது சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ பதிவு செய்துள்ளது.  

சுங்கத்துறை அதிகாரி, அவரது மனைவி மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு   

கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் முகமது இர்பான் அகமது பணியில் சேர்ந்துள்ளார். பின் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சுங்கத் துறையில் விமான உளவுத்துறை பிரிவின் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். இதனையடுத்து இந்தாண்டு ஜனவரி 19ஆம் தேதி சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக லக்னோவிற்கு விமானம் மூலம் செல்ல சுங்கத் துறை அதிகாரியான முகமது இர்பான் அகமது மற்றும் அவரது மனைவி திட்டமிட்டனர். அதனடிப்படையில்   பெங்களூரு விமான நிலையம் சென்றடைந்த சுங்கத்துறை அதிகாரி அடுத்த கட்டமாக லக்னோ செல்லும் விமானத்தை தவற விட்டுள்ளார். அப்போது பெங்களூரு கெம்பகவுடா விமான நிலையத்தில் கணக்கில் வராத 75 லட்ச ரூபாய் பணம் மற்றும் 169 கிராம் தங்கம், 5 விலை உயர்ந்த செல்போன்கள் ஆகியவற்றை சென்னை சுங்கத்துறை அதிகாரி முகமது இர்பான் அகமது மற்றும் அவரது மனைவி தஷிம் மும்தாஜ் ஆகியோரிடம் உடைமைகளை சோதனை செய்தபோது பெங்களூரு வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இதன் அடிப்படையில் பெங்களூரு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள  சுங்கத்துறை அதிகாரி முகமது இர்பான் அகமது  வீட்டில் சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இல்லாத 64 ஆயிரம் பணம், 2 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனை அடிப்படையாக வைத்து கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி கிடைத்த தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரி இர்பான் அகமது மற்றும் அவரது மனைவியின் மீது சி.பி.ஐ இந்த வழக்கை பதிவு செய்துள்ளது. சி.பி.ஐ விசாரணை செய்ததில், சுங்கத்துறையில் கண்காணிப்பாளராக பதவி உயர்வு அடைந்தவுடன் கடந்த ஆண்டு ஜூலை முதல் இந்தாண்டு ஜனவரி வரை சம்பாதித்த பணத்தின் வரவு செலவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து பார்த்தபோது 1,851% அதிகமாக சொத்துக்களை குவித்தது தெரியவந்துள்ளது.

குறிப்பாக சொத்துக்களை குவித்ததாக சி.பி.ஐ கூறும் காலகட்டத்திற்கு முன்பாக ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் அளவிற்கு சொத்துக்களை வைத்து இருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த ஆண்டு ஜனவரி மாதம் சோதனை செய்தபோது வரவு செலவு ஆகிய வற்றைத் தவிர்த்து சுமார் 75 லட்சம் ரூபாய் சொத்துக்கள் வைத்திருப்பதை கண்டறிந்தனர். இந்நிலையில்தான் சி.பி.ஐ அதிகாரிகள் சுங்கத்துறை அதிகாரி முகமது இர்பான் அகமது மற்றும் அவரது மனைவி தஷிம் மும்தாஜ் மீது சொத்துகுவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.