சினிமா வில்லனை மிஞ்சிய திமுக கவுன்சிலர்... காவல்துறையும் உடந்தை!!

சினிமா வில்லனை மிஞ்சிய திமுக கவுன்சிலர்... காவல்துறையும் உடந்தை!!

சென்னையில் கூவம் நதியை ஆக்கிரமித்த தனியார் கல்லூரி ஒன்றின் மீது புகார் அளித்தருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் கார்த்திக். சமூக ஆர்வலரான இவர், தமிழ்நாடு காவல் துறை இணையதளத்தில் சைதாப்பேட்டை 132-வது வார்டு திமுக கவுன்சிலரான கிருஷ்ண மூர்த்தி என்பவர் மீது புகார் அளித்திருந்தார். தன்னையும், தன் குடும்பத்தினரையும் ஆபாசமாக திட்டுவதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பதிவு செய்திருந்தார் கார்த்திக்.  

ஏற்கெனவே நேரடியாக சென்று கவுன்சிலர் மீது புகார் அளித்தும் போலீசார் கண்டு கொள்ளாததால் ஆன்லைன் மூலமாக மீண்டும் புகார் அளித்தார். ஆனால் இந்த முறையும் புகாரை ஏற்றுக் கொள்ளாத போலீசார், தட்டிக் கழித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஊடகத்தின் உதவியை நாடிய கார்த்திக், இதற்கு பின் மறைந்திருக்கும் பின்னணி காரணத்தை கூறி திடுக்கிட வைத்துள்ளார்.

சென்னையில் சில மணி நேரங்கள் மழை பெய்தாலும், ஒரு சில முக்கிய பகுதிகளில் நீர் சூழ்ந்து மக்களின் வாழ்வாதாரத்தை கெடுத்து விடுகின்றன. இதனை கருத்தில் கொண்ட கார்த்திக், கடந்த 6 மாதங்களாக களப்பணிகளில் ஈடுபட்டிருந்தார். தங்கள் பகுதியை மழைநீர் சூழ்ந்ததற்கு காரணம் சைதாப்பேட்டையில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி கல்லூரியே காரணம் என்பது கார்த்திக்குக்கு தெரியவந்தது. 

சென்னை சைதாப்பேட்டை வி.ஜி.பி. சாலையில் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரி. சில ஆண்டுகளுக்கு முன்பு விரிவாக்கப் பணிகள் நடைபெற்றபோது வளாகத்தை ஒட்டி அமைந்துள்ள கூவம் நதியை கல்லூரி நிர்வாகம் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. கூவம் நதி ஆக்கிரமிப்பின் காரணத்தால் மழைநீர் ஓடுவதற்கு தடை பட்டதாக சந்தேகித்த சமூக ஆர்வலர் கார்த்திக் இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பட்டா விவரங்களைக் கேட்டறிந்தார்.

இதையும் படிக்க || கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வெள்ளத் தடுப்பு ஆய்வு!!

ஆனால் பதிவுத்துறை அதிகாரிகளோ, உரிய ஆவணங்களை அளிக்காததோடு, கார்த்திக்கின் வருகை குறித்து கல்லூரியின் சேர்மனான டாக்டர் தேவராஜிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தேவராஜ், தமிழக அமைச்சரின் உதவியை நாடியதைத் தொடர்ந்து, இந்த பிரச்சினை கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தியின் வசம் ஒப்படைக்கப்பட்டது. 

உடனே விரைந்து சென்ற கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, கார்த்திக்கை அலுவலகத்துக்கு வரவழைத்து, இந்த பிரச்சினையை இதோடு விடுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் கவுன்சிலர் தன்னை மிரட்டுவதை ரகசியமாக வீடியோ எடுத்த கார்த்திக், அதனை யூ-டியூபில் வெளியிட்டார். 

இந்த வீடியோவை கவனித்து ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி, நேரடியாக கார்த்திக்கின் வீட்டுக்கே சென்று, அவரையும், அவரது தாய் மற்றும் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அரசியல் பலமும், அதிகார பலமும் தங்களிடம் இருக்கும் வரை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்றும், அதனால் இதுபோன்ற பிரச்சினைகளில் தலையிடுவதை விட்டு விட்டால் உயிர் மிஞ்சும் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் பதறிப்போன கார்த்திக், காவல் நிலையத்தில் புகார் அளித்து, அது ஏற்கப்படாமல் பின்னர் ஆன்லைனில் புகார் அளித்தார். ஆனால் தற்போது வரை ஆன்-லைன் புகாரும் ஏற்கப்படாததால் நடந்த இந்த சம்பவங்களை வாக்குமூலமாக அளித்துள்ளார் கார்த்திக். 

சென்னையில் பல்வேறு இடங்களில் கூவத்தை ஒட்டி அமைந்துள்ள உள்ளூர் வாசிகளிடம் சொந்த வீடு தருவதாக கூறி ஊரை விட்டே வெளியேற்றி விட்டு, தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்வது வாடிக்கையாகி வருகிறது. இப்படி இருக்க, மக்களை மழைநீரில் தவிக்க விடுவது போல தன்னிச்சையாக இயங்கும் இதுபோன்ற தனியார் நிறுவனங்களை தட்டிக் கேட்டால் கூட கேட்பாரில்லை என்பதுதான் கொடுமை என சமூக ஆர்வலர்கள் புலம்பி வருகின்றனர்.

இதையும் படிக்க || சென்னையில் மாடு உரிமையாளர்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்; ஆணையர் தகவல்!